பாமக தலைவர் ராமதாஸ்
PMK Founder Ramadoss Speech About Anbumani : அன்புமணி தரப்பின் எதிர்ப்புகளை மீறி, டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவராக ராமதாஸ், பொதுச்செயலாளராக முரளிசங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.
கௌரவ தலைவரானார் ஜி.கே. மணி
கௌரவ தலைவராக ஜி.கே.மணி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம் அன்புமணி தரப்பால் பாமகவில் இருந்து ஜி. கே. மணி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக பொருளாளராக சையத் மன்சூர் உசேனை தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துரோகத்தை வீழ்த்துவோம் - தீர்மானம்
துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ''அன்புமணியின் செயல்களால் ராமதாஸ் மனம் உடைந்து இருக்கிறார். அன்புமணி இனி தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது'' என ஜி.கே.மணி தெரிவித்தார்.
கண் கலங்கிய ராமதாஸ்
பொதுக்குழுவில் பேசிய ராமதாஸ், “100க்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள்(Ramadoss Speech in Salem) என் பக்கம் தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5% மக்கள் கூட இல்லை. நான் வளர்த்தப்பிள்ளைகளே என்னை தூற்றுகிறார்கள்.
ராமதாசை தேற்றிய தொண்டர்கள்
தூக்க மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றால் கூட அன்புமணியின் நினைப்பு வந்துவிட்டால் தூக்கம் வருவதில்லை. கனவில் வந்த எனது தாயாரிடம் நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி கதறி அழுதேன் என மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
அதனைப் பார்த்த தொண்டர்கள் உடனடியாக அவரை தேற்றினர். மேலும் அழாதீர்கள், அழாதீர்கள் என கோஷம் எழுப்பினர்.
என்னை தூற்றும் பிள்ளைகள்
நான் பொறுப்பு கொடுத்தப் பிள்ளைகள், இன்று என்னை தூற்றுகிறார்கள். ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்னவெல்லாம் செய்வாரோ, அதைவிட அதிகமாகவே செய்திருக்கிறேன். ஒரு குறையும் வைக்கவில்லை.
அவமானப்படுத்துகிறார் அன்புமணி
ஆனாலும் சில்லறைப் பசங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார். அரசியலில் எந்த பொறுப்பும் வகிக்க மாட்டேன் என்று நான் செய்த சத்தியத்தை இன்று வரை நான் காப்பாற்றி வருகிறேன். நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்தப் பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.
அன்புமணியை அமைச்சராக்கியது நான்
ஆனால் அதை செய்யவில்லை. பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சரானாய். கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை. நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும் .
தேர்தலில் அன்புமணிக்கு பதிலடி
தேர்தலில் அன்புமணிக்கு சரியான பதிலடி தருவோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணி என கேட்டால், ராமதாஸ் நல்ல கூட்டணி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும் என சொல்லுங்கள். என்னை கொல்ல வேண்டும் என பதிவு போட்டவருக்கு அன்புமணி பொறுப்பு கொடுத்திருக்கிறார்.
அன்புமணியால் பொறுத்திருக்க முடியாதா?
சென்னையில் சொத்து தகராறில் தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றார் மகன். அதை விட அன்புமணி மோசமாக நடக்கிறார். என்னை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று இருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறார். 5 ஆண்டுகள் அன்புமணியால் பொறுத்திருக்க முடியாதா?
அன்புமணியை மாற்றவே முடியாது
அன்புமணியை மாற்ற முடியாது, மாற்ற வழியில்லை. பாட்டாளி மக்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை.கோடிக்கணக்கில் பணத்தை வைத்து பம்மாத்து வேலை செய்கிறார் அன்புமணி. பதவியை பெறுவதில்லை என்ற எனது சத்தியத்தால் தான் அன்புமணி அமைச்சரானார். அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன். என்னை மோசமாக சித்தரிப்பதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்” இவ்வாறு பொதுக்குழுவில் ராமதாஸ் உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.
===============