30 வார்டுகளை கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வென்றது. 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. இருந்தபோதும் கூட்டணி கட்சிகளின் தயவில் நகராட்சி தலைவர் பதவியை அதிர்ஷ்டக் குலுக்களில் திமுக கைப்பற்றியது .
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி தலைவரானார். அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு வைஸ் துணைத் தலைவரானார். இதனிடையே தலைவர் உமா மகேஸ்வரிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு உமா மகேஸ்வரிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். 2023 டிசம்பரில் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அப்போது, அமைச்சர்கள் தலையிட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் தடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை, கவுன்சில் கூட்டத்தை முறையாக கூட்டவில்லை உள்ளிட்ட புகார்களைச் சொல்லி திமுக மற்றும் கூட்டணிக்கட்சி கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் 24/30 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றதால் உமாமகேஸ்வரி தகுதி இழந்தார்.
இதற்கான முறையான அறிவிப்பு சென்னை அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று நகராட்சி ஆணையர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.