அனல் பறக்கும் தேர்தல் களம்
AIADMK Seat Sharing 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம், நாளுக்குநாள் விறுவிறுப்படைந்து வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனைப்போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்தால், மும்முனைப் போட்டி இருக்கும்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
திமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யப்பட்டு வருகிறது.
அதிமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 16ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுகவில் 16ம் தேதி பேச்சுவார்த்தை
எனவே, 16ம் தேதி ( திங்கட்கிழமை ) முதல் கூட்டணிக் கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
ஆலோசனைகளை முடித்து, மார்ச் மாத இறுதிக்குள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
170 தொகுதிகளில் அதிமுக போட்டி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
அதன்படி, சுமார் 170 தொகுதிகளில் அதிமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு 64 இடங்கள்
64 தொகுதிகள் வரை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க முடியும் என்ற முடிவுடன் எடப்பாடி செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
பாஜகவிற்கு 30 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக உள்ள பாஜக ஆரம்பத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது 30 முதல் 35 தொகுதிகள் வரை கேட்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 30 தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் போன்ற முக்கிய தொகுதிகளுடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மேற்கு மண்டலத்தின் சில முக்கிய தொகுதிகளையும் பாஜக தனது லிஸ்ட்டில் வைத்து அதிமுகவுடன் பேச இருப்பதாக தெரிகிறது.
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்
அதுமட்டுமின்றி, கூட்டணிக்கு வந்துள்ள சிறிய கட்சிகளுக்கு தானே சில தொகுதிகளை ஒதுக்கவும், அவற்ற தாமரைச் சின்னத்தில் போட்டியிடச் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இரட்டை இலக்கம் - பாஜக வியூகம்
இந்தமுறை சட்டமன்றத்தில் இரட்டை இலக்க எம்எல்ஏக்களுடன் காலடி வைக்க பாஜக திட்டம் வகுத்து, அதற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறது.
பாமகவிற்கு 20 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றன. பாமகவிற்கு கட்சிக்கு 20 முதல் 23 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட்டு உள்ளது.
அமமுகவிற்கு 10 தொகுதிகள்
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 9 முதல் 13 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள்
சிறிய கூட்டணிக் கட்சிகளான தமாகா மற்றும் ஜான் பாண்டியன் தலைமையிலான கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கிருஷ்ணசாமி கூட்டணிக்கு வந்தால் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
17ம் தேதி அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
ஒருபக்கம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து வரும் 17ம் தேதி என்டிஏ கூட்டணி கட்சிகள் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
தொண்டர்கள் ஒருங்கிணைப்பு
இந்தப் போராட்டத்தின் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அடிமட்ட தொண்டர்கள் வரை கூட்டணியின் ஒற்றுமையை கொண்டு செல்லவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.
திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டம் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
என்டிஏ கூட்டணியில் விஜய்?
இதற்கிடையே, என்டிஏ கூட்டணிக்கு தவெக வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணி செல்லலாமா என மாவட்ட செயலாளர்களுடன் தவகெ நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை முக்கிய திருப்பதாக பார்க்கப்படுகிறது.
கரூர் வழக்கிற்காக இன்று டெல்லி செல்லும் விஜய், பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
என்டிஏ கூட்டணிக்கு தவெக வந்தால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரிய அளவில் மாற்றத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
=============