Seeman warned if Tamils ​​are insulted by portraying Lord Murugan born in the North AI Generated
தமிழ்நாடு

”எங்கள் முப்பாட்டன் முருகன்” : வடபுலத்தில் பிறந்தவராக சித்தரிப்பதா? : தமிழர்களை இழிவுபடுத்தினால், சீமான் எச்சரிக்கை...!

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானே வடபுலத்தில் பிறந்தவர் எனச் சித்தரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

Kannan

முருகனை மையப்படுத்தி தெலுங்கு படம்

தமிழ் இறையோனான முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

திரித்து கட்டமைக்க கூடாது

கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்ப் பேரினம் 50,000 ஆண்டு வரலாறு

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும்...

புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது.

குறிஞ்சியின் தலைவif முருகன்

அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.

கற்பனை மூலம் வரலாற்றை மாற்றுவதா?

வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்கு புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்க் கடவுள்களை திருடி சேர்க்கின்றனர்

தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக் கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச் சேர்த்துக் கொண்டனர்.

தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள்.

கடவுளை கடன் கொடுத்த தமிழர்கள்

கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.

எங்களின் ஆதி இறைவன் முருகன்

இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான்.

தமிழையும், முருகனையும் பிரிக்க முடியாது

அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல.

அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.

முருகனை போற்றிய தமிழ் நூல்கள்

முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள்...

நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன.

மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

குன்று தோறாடும் குமரன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன.

முருகனை தொட்டால், எச்சரிக்கை

எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.