எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன்
Sengottaiyan About EPS : கட்சி தலைமையை விமர்சித்ததற்காக அதிமுகவில் பொறுப்பில் இருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதையும் தவிர்த்தார். அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களிலும் பங்கேற்பது இல்லை.
மூவருடன் கைகோர்த்த செங்கோட்டையன்
தேவர் குருபூஜையில் பங்கேற்க ஓபிஎஸ் உடன் ஒன்றாக பயணித்த செங்கோட்டையன் தினகரன், சசிகலாவையும் சந்தித்து பேசினார். நால்வரும் கைகோர்த்து எடப்பாடிக்கு எதிராக செயல்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசி
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ” 1975ல் நடைபெற்ற அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர். எனக்கு வாய்ப்பு வழங்கினார். அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்தவன் நான். ஜெயலலிதா இருந்தபோதும் அவர் சொல்படி கட்சி பணிகளை ஆற்றினேன்.
வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன்
இமயமே தன் தலையில் விழுந்தாலும் சறுக்காமல் இருப்பவர் செங்கோட்டையன் என ஜெயலலிதாவே புகழ்ந்துள்ளார். விசுவாசமாக இருந்ததால்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன்.
கட்சியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னை கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஒன்றுபடாததால் தோல்வி
அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருத்தை ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். 2024 மக்களைவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என கூறியதால் எனது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பேசினேன்.
ஒருங்கிணைக்க பாடுபட்டேன்
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன். அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கோடுதான் பழனிசாமி 10 நாளில் ஒன்றிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என கூறினேன். 2026ல் அதிமுக தோல்வியுற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் பேட்டியளித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
எடப்பாடி தான் ஏ1
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏ1 ஆக எடப்பாடி உள்ளார். நான் பி டீம்மில் இல்லை; எடப்பாடிதான் ஏ1 ஆக உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை பற்றி பேச பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடிக்குதான் பொறுப்பு இருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது; கண்ணீர் வடிக்கிறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்துகிறேன்.
எடப்பாடிக்கு சீனியர் நான்
அதிமுகவில் 53 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எடப்பாடி அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவன் நான். 53 ஆண்டு காலம் பணியாற்றிய எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம். சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற நிலையில் எடப்பாடி இருக்கிறார்.
எடப்பாடிக்கு நோபல் பரிசு தரலாம்
துரோகத்தின் நோபல் பரிசு எடப்படி பழனிசாமிக்குதான் கொடுக்க வேண்டும். தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி 53 ஆண்டுகாலம் கட்சியில் உள்ள என்னை நீக்கியுள்ளது கேள்விக்குறியானது. என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்” என்று செங்கோட்டையன் பேட்டியளித்தார்.
====================