சுட்டெரிக்கும் சூரியன்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. பல நகரங்களில் வெயில் சதம் அடித்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
உச்சம் தொடும் வெப்பம்
மே 4ம் தேதி கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. அப்போது வெம்மையின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்று, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பஅலை காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்
வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்...
நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலவசமாக ஓஆர்எஸ் கரைசல்
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் இலவசமாக இந்தக் கரைசலை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல்
இதுமட்டுமின்றி, விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
HEAT STROKE வார்டுகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் HEAT STROKE என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
HEAT STROKE காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் ஓஆர்எஸ் தயாரிக்கும் முறை
1 லிட்டர் சுத்தமான நீரில், 6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டீஸ்பூன் உப்பு கலந்து ORS கரைசல் தயாரிக்கலாம்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுசெய்து உடல்நிலையை மேம்படுத்துகிறது.
==================