Southern Railway announcing special trains to various destinations from Chennai for Ayudha Puja, Diwali festivals  
தமிழ்நாடு

ஆயுத பூஜை, தீபாவளிக்கு “ சிறப்பு ரயில்கள்” : முன்பதிவு தொடக்கம்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது தெற்கு ரயில்வே.

Kannan

பண்டிகை காலம், மக்கள் மகிழ்ச்சி :

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உற்றார், உறவினரோடு கொண்டாடி மகிழ்வர். இதற்காக வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள், பேருந்துகளோடு, சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியாக சொந்த ஊர்களுக்கு சென்று வர முடியும். அதன்படி, அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வருகிறது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு :

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்த மாதம் வரவுள்ளது. இதனையொட்டி பயணிகளின் வசதிக்கான சென்னையில் இருந்து நாகர்கோவில், போத்தனூர், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

நாகர்கோவில் - சென்னை சென்டிரல் :

நாகர்கோவில் - சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் (06054/06053) இயக்கப்படுகிறது.இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அன்று இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

நாகர்கோவில் - தாம்பரம் :

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண் 06012/06011) இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிறு) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி :

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் (06070/06069) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் நள்ளிரவு 1.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்

சென்னை சென்டிரல் -செங்கோட்டை :

இதேபோன்று, சென்னை சென்டிரல் செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் (06121/06122) இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்) மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழன்) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

தூத்துக்குடி-சென்னை எழும்பூர் :

இதேபோல், தூத்துக்குடி சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06018/06017) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமுடன் இருப்பவர்கள், முன்பதிவினை செய்து வருகிறார்கள்.

=======================