பறக்கும் ரயில் சேவை
Velachery To Parangimalai Train Service Starting Date : சென்னையில் பறக்கும் ரயில் சேவை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பயன்பாட்டில் உள்ளது. பறக்கும் ரயில் சேவையைத் திட்டமிட்ட போது, 3 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தது.
அதன்படி கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை முதல் கட்டப் பணிகளும், மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை இரண்டாம் கட்டப் பணிகளும், வேளச்சேரி முதல் பரங்கிமலை மூன்றாம் கட்டப் பணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மார்ச் 10 முதல் சேவை
இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 15 ஆண்டுகால முயற்சிக்கு பிறகு இந்த தடத்தில் ரயில் சேவை கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு நனவாகப் போகிறது.
ரயில் பயணிகள் மகிழ்ச்சி
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இதன்படி வெளியாகி இருக்கும் அறிவிப்பு ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை இன்னும் 12 நாட்களில் தொடங்கவிருக்கும் சூழலில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம் - எழும்பூர் சேவைகள் குறைப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் பலரும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மார்ச் 10 முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க உதவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்
ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, பேருந்து சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் டிக்கெட் அல்லது ரயில் பாஸ் வைத்திருந்தால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு பேருந்தை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
==============