சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்
SIR Begins in Tamil Nadu : பிகாரில் ஏற்கனவே நடத்தப்பட்டது போல, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதற்காக?
இந்தநிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்கியது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது எதற்காக? இதில் வாக்காளர்களின் பங்கு என்ன? என்பதை பார்க்கலாம். .
தகுதியான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்வது, இருப்பிடத்தைவிட்டு வெளியேறியவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது இதன் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் இன்று ( நவம்பர் 4 ) முதல் டிசம்பர் 4ம் தேதி வரை திருத்த பணிகள் நடைபெறும்.
வீடுதோறும் படிவங்கள் வழங்கப்படும்
வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட இரு படிவங்களை வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று வழங்குவார்கள்.
வாக்குச்சாவடி அலுவலர் தரும் படிவங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பூர்த்தி செய்து தர வேண்டும். ஆவணங்கள் எதையும் தர வேண்டியதில்லை. வாக்காளர் விரும்பினால் சமீபத்திய புகைப்படத்தை கொடுக்கலாம்.
ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்
வாக்குச்சாவடி அலுவலர் தரும் படிவங்களில் ஒன்றை, பூர்த்திசெய்து அவரிடமே திருப்பித் தர வேண்டும். அதற்கான ஒப்புகையையும் அவர் வழங்குவார். மற்றொன்றை நம்மிடமே தந்துவிடுவார்.
ஆன்லைனிலும் பூர்த்தி செய்யலாம்
Voters.eci.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவேற்றலாம். வாக்காளர் முகவரி மாறியிருந்தால், அதே பாகத்தில் மாறி இருந்தால், வீட்டுக்கு வரும் அதிகாரியிடம் தெரிவிக்கலாம். தொகுதி மாறி இருந்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
வாக்காளர் தொகுதி மாறி இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாது. டிசம்பர்.9ம் தேதிக்கு பிறகு, உரிய ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க : SIR வாக்காளர் சிறப்பு திருத்தம் : அச்சம் வேண்டாம், தேர்தல் ஆணையம்
புதிதாக பெயர் சேர்க்க முடியாது
புதிதாக பெயரை சேர்க்க முடியாது. அதேநேரத்தில், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம்-6ஐ நிரப்பித் தர வேண்டும். எனினும் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. உரிய ஆய்வுக்குப் பின்னர் பட்டியலில் சேர்க்கப்படும்.
=====.