12 மாநிலங்களில் 'SIR 2.0'
SIR Begins in Tamil Nadu : 'SIR 2.0' என்று பெயரிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் நிறைவடையும்.
'SIR 2.0' கள ஆய்வு
'SIR 2.0' என்பது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வாக்காளர் தரவுத்தளத்தில் இருந்து பிழைகளை நீக்குவதற்கும், நகல்களை அகற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு கள அளவிலான நடவடிக்கையாகும்.
ஜனநாயகத்தை தூய்மைப்படுத்தும் பணி
வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்ய, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். இது ஒரு ஜனநாயக தூய்மைப்படுத்தும் பணி.
வீடுதேடி வரும் அதிகாரிகள்
வீடு தேடி வரும் அதிகாரிகள் தரும் ஆவணங்களை நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும். தேர்தல் ஆணையம் 'SIR 2.0' ஐ மிகவும் அவசியமாக கருதுகிறது. கடைசியாக 2002 மற்றும் 2004 க்கு இடையில் நாடு தழுவிய சிறப்புத் தீவிர திருத்தம் நடைபெற்றது. அதன்பிறகு, தற்போது தான் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
'SIR 2.0' பணிகள் எப்படி மேற்கொள்ளப்படும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் ஒரு தேர்தல் பதிவு அலுவலரால் (ERO) நிர்வகிக்கப்படும். இவருக்கு துணையாக சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) இருப்பார்கள். இவர்கள் விவரங்களை சரிபார்க்க வீடுகளுக்கு நேரில் செல்வார்கள். ஒவ்வொரு சாவடி நிலை அலுவலரும் சுமார் 1,000 வாக்காளர்களைக் கையாளுவார்கள்.
கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும்
அவர்கள் கணக்கெடுப்பு படிவங்களை (EFs) விநியோகிப்பார்கள் மற்றும் புதிய பதிவுகளுக்கான படிவம் 6 ஐ, சரிபார்ப்புக்கான அறிவிப்பு படிவத்துடன் சேகரிப்பார்கள். நகர்ப்புற மற்றும் புலம் பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை இந்தப் பணிகள் நடைபெறும். பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகறை பெற்ற பின்னர் டிசம்பர் 9ம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும்.
2026 பிப்.7 இறுதி வாக்காளர் பட்டியல்
அதன் பிறகு, ஜனவரி 8, 2026 வரை பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்யலாம். விசாரணைகள் மற்றும் சரிபார்ப்புகள் ஜனவரி 31 வரை தொடரும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
எந்தெந்த ஆவணங்கள் தேவை? சரிபார்ப்பின் போது எந்த ஆவணமும் கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், அடையாள மற்றும் வசிப்பிடச் சான்றுகளாகப் பயன்படுத்தக்கூடிய 12 பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள், ஓய்வூதியப் பணம் செலுத்தும் உத்தரவு.
2. இந்திய அரசு/வங்கிகள்/உள்ளாட்சி அமைப்புகள்/பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்படும் அடையாள அட்டைகள்/சான்றிதழ்கள்/ஆவணங்கள்.
3. உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
4. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்).
5. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மெட்ரிக்/கல்விச் சான்றிதழ்.
6. மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்.
7. வன உரிமைச் சான்றிதழ்.
8. இதர பிற்படுத்தப்பட்டோர்/பட்டியல் பழங்குடியினர்/பட்டியல் இனத்தவர் அல்லது வேறு எந்த சாதிச் சான்றிதழ்.
9. தேசிய குடிமக்கள் பதிவேடு (எங்கு உள்ளதோ அங்கு).
10. மாநில/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு.
11.அரசால் வழங்கப்படும் நிலம்/வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
12. ஆதார் அட்டை
====================