Starlink India Permit Elon Musk Kamal Haasan Reaction source: google
தமிழ்நாடு

'ஸ்டார்லிங்க்' அனுமதி சர்ச்சை : ”எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்” : எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் கண்டனம்!

ஸ்டார்லிங்க் அனுமதி விவகாரத்தில் இந்திய அரசு மற்றும் அம்பானியை விமர்சித்த எலான் மஸ்க்கிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

Starlink India Permit Elon Musk Kamal Haasan Reaction

எலான் மஸ்க் விமர்சனமும் பின்னணியும்

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் விண்வெளி செயற்கைக்கோள்கள் மூலம் உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்கி வருகிறது. இதுவரையில் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்த ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவிலும் தனது சேவையைத் தொடங்கத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு அனுமதி மறுப்பு

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த எலான் மஸ்க், ரிலையன்ஸ் ஜியோ போன்ற இந்தியப் பெருநிறுவனங்களே ஸ்டார்லிங்க் வருகையைத் தடுத்து நிறுத்துவதாகக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், "இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? பிரதமர் அம்பானி அவர்களுக்கு வணக்கம்" என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது பெரிய விவாதத்தைக் கிளப்பியது.

எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசனின் பதிலும் கண்டனமும்

எலான் மஸ்கின் இந்த விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.

"எந்தவொரு கோடீஸ்வரரும் - அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி - ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது" என்று தனது பதிவைத் தொடங்கிய கமல்ஹாசன்,

சமமான வாய்ப்பும் மலிவான இணையமும்

"கிராமப்புற மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் மலிவான விலையில் இணைய சேவை கிடைக்க போட்டிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், அதிக சந்தாக் கட்டணங்கள் புதிய டிஜிட்டல் இடைவெளியை உருவாக்கிவிடக் கூடாது.

நமது அலைக்கற்றை மற்றும் நெட்வொர்க் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய உத்திசார் சொத்துக்கள். அதில் தேசிய பாதுகாப்பு விதிமுறைகளில் எந்தக் சமரசமும் செய்ய முடியாது."

மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு

"மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்பை கடைப்பிடித்துக்கொண்டு, பிற நாடுகளுக்கு தாராள சந்தைகளைப் பற்றிப் போதிக்க முடியாது. அமெரிக்கா தனது உள்நாட்டு தொழிலைப் பாதுகாக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதிக்கிறது.

பாதுகாப்பு சூழல் காரணமாக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளன. தன் சொந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்கும்போது மட்டும் மற்றவர்களிடம் சமமான வாய்ப்பைக் கோர முடியாது."

பாரத்நெட் திட்டம் மற்றும் தொலைதொடர்புத் துறை

"இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையின் விதிமுறைகளே உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இணையத்தைப் லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளன.

அதேவேளையில், பாரத்நெட் திட்டத்தில் ரூ. 39,888 கோடி செலவிட்டும் 33.2% கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே செயல்படுகின்றன என சிஏஜி 2026 தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டிய குறைபாடுகளை ஒரு ஜனநாயக நாடாக நாம் கேள்வி கேட்போம்."

ஜனநாயக நாடு; காலனி நாடு அல்ல!

தமது பதிவின் முடிவில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு; காலனி நாடு அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம், ஆனால் நமது எதிர்காலத்தை இந்திய மக்களாகிய நாங்களே தீர்மானிப்போம் - எந்தவொரு மேற்கத்திய சுயநலன்களோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ அல்லது இந்திய, அமெரிக்க கோடீஸ்வரர்களோ அல்ல!" என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

==============