அடுத்த பிரதமர் வேட்பாளர்
2029 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தவெக, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.
2029ல் விஜய் பிரதமர் ஆவார் என்று, தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
கனிமொழி, தாரகை இடையே மோதல்
இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரதமர் வேட்பாளர் விஜய் தான்
அப்போது பேசிய அவர், “2029இல் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் தான். 2025இல் நான் கணித்ததைப் போல 2026இல் விஜய் முதலமைச்சரானார்.
தமிழகத்தில் இருந்து தான் பிரதமர்
2026ல் சொல்கிறேன் 2029ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார்” என்று உறுதிபடக் கூறினார்.
விஜயை பிரதமராக்குவார் ராகுல்
2029ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை.
ராகுல் காந்திதான் விஜயை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை அவரை பிரதமராக அமர வைப்பார்” என்றும் கனிமொழி தெரிவித்தார்.
ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் - காங்கிரஸ்
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், “அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜயே இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள்.
இந்தியா தெளிவாக உள்ளது
அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது” என்று பதிலடி கொடுத்தார்.
===