Supply affected by drop in Aavin milk procurement: Anbumani urges Chief Minister Vijay! google
தமிழ்நாடு

"ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி" வினியோகம் பாதிப்பு : முதல்வர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை!

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 13.50 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது.

Kavitha prasanna

Supply affected by drop in Aavin milk procurement: Anbumani urges Chief Minister Vijay!

ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சியால் வினியோகம் பாதிப்பு காரணமாக வாங்கும் விலையை உயர்த்தி கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய்க்கு தனது எக்ஸ் பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் பால் வினியோகம் குறைவு

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் சந்தையில் ஆவின் பாலுக்கு பெரும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் வினியோகம் 3 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதாகவும், சென்னையில் மட்டும் 2.5 லட்சம் லிட்டர் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவையான பால் வினியோகத்தில் ஆவின் நிறுவனம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

ஆவின்பால் வினியோக பின்னடைவுக்குக் காரணம்

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 13.50 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது.

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 28 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு முறைந்து விட்டது தான் ஆவின் பால் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் ஆகும்.

கடந்த 2021 முதல் - 2023 ஆம் ஆண்டு வரை

கோடைக்காலம் என்பதால் தான் ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதாக ஆவின் நிறுவனம் கூறுகிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

2021-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 38 லட்சம் லிட்டர், 2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல் இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது.

பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர மக்கள்

ஆவின் பால் வினியோகம் குறைந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும், தனியார் நிறுவன பால் விலைக்கும் இடையே லிட்டருக்கு ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகம் ஆகும்.

தனியார் நிறுவன பாலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு வரப்பிரசாதமாக ஆவின் பால் அமைந்துள்ளது. பால் வினியோகத்தைக் குறைந்து அந்த மக்களை ஆவின் தண்டிக்கக்கூடாது.

கொள்முதல் விலை உயர்த்தாததே காரணம்

ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்களை விட கூடுதல் விலை

ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.

நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக அதன் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45.

எருமை பாலுக்கு ரூ.54 என உயர்த்துவதற்கும், அதன் மூலம் அதிக அளவிலான பாலை கொள்முதல் செய்து நியாயமான முறையில் மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

=====