Supreme Court Allows Lighting of Karthigai Deepam at Thiruparankundram Deepam Pillar with Conditions Google
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ”தீபம் ஏற்ற அனுமதி” : நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவு ...

NARENDRAN K

உச்சநீதிமன்றம் குடுத்த அதிரடி தீர்ப்பு :

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால நவம்பர் 24-ம் தேதி திருப்பரங்குன்றம் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

ஒருமுறை மட்டுமே அனுமதி:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் தீபத் தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே இடத்தில் தீபம் ஏற்ற உரிமை கோர முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

யாரெல்லாம் தீபம் ஏற்றலாம்?

தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறிய குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் காவல்துறையினருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது:

தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மற்றும் பாதுகாப்பு, மேற்பார்வை பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டுமே அந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

மேலும், அந்தப் பகுதியில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முழக்கங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வு முடிந்ததும் சம்பந்தப்பட்ட குழுவினர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது:

மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவிதமான அகழாய்வு, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு மாற்றங்களையும் மேற்கொள்ள கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் வழங்கப்பட்டுள்ள அனுமதி, அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வழக்கம் என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

=====================