தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Supreme Court Questions Tamil Nadu Government on freebies : தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடரும்? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
மின் திருத்த விதிகள் 2024-ல் உள்ள விதி 23-ஐ எதிர்த்து, தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
100 யூனிட் இலவச மின்சாரம்
தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது தொடர்பான வழக்கு , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விபுல் பஞ்சோலி, ஜோய்மால்யா நீதிபதிகள் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கும், தேர்தல் காலங்களில் இலவசங்களை அறிவிக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்கள் வேலை செய்வார்களா?
தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடரும்? தொடர்ந்து இலவசங்கள் கொடுத்தால் மக்கள் வேலை செய்வார்களா?
பொருளாதார வளர்ச்சி தடைப்படும்
அரசின் சலுகையைப் பெற தகுதியானவர்கள் மட்டுமின்றி அனைவரும் பெறும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலவசங்கள் தடை செய்யும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசுக்கு நிதி எங்கிருந்து வருகிறது
தமிழக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினால், அதற்கு எங்கிருந்து நிதி வருகிறது . மின்சார கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்கள் கூட இலவச மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பது தெரியும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்களை அறிவிக்கின்றன.
அரசின் நேரடி பணப்பரிமாற்ற திட்டம்
அரசின் மூலம் இப்படி நேரடி பணப்பரிமாற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் மக்கள் வேலைக்கு செல்வார்களா என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலவசங்கள் - எவ்வளவு காலத்திற்கு...
தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடரும்? அதற்கான நிதி எங்கிருந்து வருகிறது?
இலவசங்கள் அறிவிப்பதை விட்டுவிட்டு, அதற்கான நிதியை சேமித்து கல்வி நிலையங்கள் கட்டப்பட்டால் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பலன் தரும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மக்கள் மீது விழும் செலவு
மேலும் இலவசங்கள் அறிவிக்கப்படும் போது அந்த திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். இந்த இலவசங்களுக்கு அரசு செய்யும் செலவு வரி செலுத்தும் மக்கள் மீது தான் விழும்.
அதனால் தேவையற்ற செலவுகளை விட்டுவிட்டு அவற்றை கல்விக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்
அனைவரும் இலவச உணவு, மின்சாரம், மிதிவண்டி வழங்குவதை விட்டுவிட்டு புதிய வேலைவாய்ப்புகளை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் .
பிரமாண பத்திரம் தாக்கல்
முதலில் தேர்தல் காலத்திற்கு முன்பாக ஏன் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற இலவசம் தொடர்பான அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக அரசு இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
===