அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள்
Supreme Court on Election Promises : தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை ஒட்டி அதிமுக, திமுக இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றன. தேர்தலுக்கு முன்பு அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையினை வெளியிடும்.
இலவச வாக்குறுதிகள் - எதிர்த்து வழக்கு
இந்தநிலையில் தேர்தலுக்கு முன்பு, இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கருத்து
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இதை விசாரிக்க அவசரம் இல்லை, தேர்தலுக்கு பின்னர் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுக்கு நிதிச்சுமை
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆதாரங்களை காட்ட வேண்டும்
அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நடத்தை விதிகளில் திருத்தம் தேவை
இதுபோன்ற அறிவிப்புகளைத் தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும் என்றும், இலவசத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிக்கான சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில இன்று விசாரணைக்கு வந்தது.தேர்தல் முடிந்த பின் இந்த வழக்கை விசாரிக்கலாம். கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, அவசரம் காட்டத் தேவையில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
======