E-Challan Fines with Electricity Bills source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

E-Challan அபராதத்தை மின் கட்டணத்துடன் இணைக்க உச்சநீதிமன்றம் யோசனை: தவறினால் கருப்புப் பட்டியலில் வாகனங்கள்!

திடீர் சோதனைகளை நடத்தி, அபராதம் செலுத்தாத வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

Kavitha prasanna

Supreme Court Suggests Linking Pending E-Challan Fines with Electricity Bills

போக்குவரத்து இ-சலான் அபராதங்களை வசூலிக்க மின் கட்டணத்துடன் இணைக்க உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. நிலுவை வைத்தால் ஆர்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை.

மின் கட்டணத்துடன் அபராத இணைப்பு

போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் இ-சலான் அபராதங்களை வசூலிக்க, அதனை வீட்டு மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனையை முன்வைத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் கண்காணிப்பது குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: நீதிபதிகள் கருத்து

அப்போது, காவல்துறையினர் லட்சக்கணக்கில் இ-சலான்களை வழங்குவது மட்டும் போதாது என்றும், அபராதத்தை வசூலிப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அபராதத்தை மின் கட்டணத்துடன் இணைத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தில் மக்கள் செலுத்திவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர்.

ரூ.45,000 கோடி அபராதம் நிலுவை

நாடு முழுவதும் ரூ.45,000 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரையில் ரூ.25,000 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. எனவே, நிலுவைத் தொகையை வசூலிக்க நீதிமன்றம் சில கடுமையான நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.

நீதிமன்றம் பரிந்துரைத்த கடுமையான நடவடிக்கைகள்

அபராதம் செலுத்தாத வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் (RC) புதுப்பிக்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது.

அந்த வாகனங்களைப் 'பரிவாகன்' இணையதளத்தில் கருப்புப் பட்டியலில் சேர்ப்பதுடன், தகுதிச் சான்றிதழ் (FC) மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் (PUC) நிறுத்தி வைக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கத் தடை விதிப்பதுடன், பயன்பாட்டில் உள்ள உரிமங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடீர் சோதனைகளை நடத்தி, அபராதம் செலுத்தாத வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

களநிலவரத்தைப் புரிந்து பணியாற்ற அறிவுறுத்தல்

அதிகாரிகள் களநிலவரத்தைப் புரிந்து தரைமட்டத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். கோவையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ராஜசேகரன் 2012-ல் தொடர்ந்த பொதுநல வழக்கின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

=====