Sweeping changes introduced DMK executive committee meeting, number of district secretaries raised to 110 AI generated
தமிழ்நாடு

”45 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவில் அதிரடி மாற்றம்” : மாவட்டங்கள் 110, செயலாளர்களுக்கு வயது உச்சவரம்பு..!

திமுக செயற்குழு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Kannan

திமுக கட்சி அமைப்பில் மாற்றங்கள்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, திமுகவில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு பரிந்துரைகளை தலைமைக் கழகத்துக்கு வழங்கியிருந்தது.

திமுக செயற்குழு கூட்டம்

அவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து முடிவு எடுத்தார். இந்தநிலையில், திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில், தீர்மானமாக எடுக்கப்பட்ட முடிவுகள் முன்மொழியப்பட்டன.:

கிளைச் செயலாளர் - இளையோருக்கு வாய்ப்பு

திமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மாநகர பகுதிகளில் கிளைக்கழகம்

மாநகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பாகத் திகழ்வது வட்டக் கழகங்கள். அதனை மேலும் வலிமைப்படுத்திட புதிய அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது.

அதனடிப்படையில், புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.

வயது வரம்பு நிர்ணயம் - 2 முறை வாய்ப்பு

45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

வட்டச் செயலாளர் - வயது வரம்பு

நகர்ப்புறங்களில் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது மாநகரம் - நகரம் - பேரூர்க் கழகம் என்று இயங்கி வருகின்றன. மாநகர - நகர மற்றும் பேரூர்க் கழகக் கட்டமைப்புகளின் வலிமை மிக்க தூணாக விளங்குபவை வட்டக் கழகங்கள்.

சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும்.

மாநகர - நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

பேரூர்க் கழகச் செயலாளர் பதவி 2 முறை மட்டுமே

கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது.

ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

பகுதிச் செயலாளருக்கு அதிகபட்ச வயது தகுதி 60

மாநகரங்களில் கழகத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக விளங்குவது பகுதிக் கழகங்கள். சென்னை மாநகராட்சியில் இனி அமையும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்களாகவும் அமைய வேண்டும்.

அப்படி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களுக்கான செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என்றும், அவர்கள் அதிகபட்சமாக இரு முறை அப்பொறுப்பில் பணியாற்ற முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

நகரச் செயலாளர் - வயது வரம்பு 60

இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகி வரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது.

அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் கழக ஒன்றியம்

மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஒன்றிய கழக செயலாளர் - வயது வரம்பு 60

ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது.

ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்க வேண்டும். ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக் கூடாது என்று தீர்மானிக்கப்படுகிறது.

மாவட்டக் கழகங்கள் 110 ஆக அதிகரிப்பு

திமுகவின் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை இதுவரை 77 ஆக இருந்தது. இது, 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பு இனி தேவையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறவுள்ள தொகுதிகளைக் கட்சியின் தலைவரே அறிவிப்பார்.

110 மாவட்டங்களிலும் விரைவில் செயற்குழுக் கூட்டம்

110 மாவட்டக் கழகங்களை அறிவித்தவுடன், அனைத்து மாவட்டக் கழகங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

இவ்வாறு 9 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படன.

45 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்

திமுகவில் 45 ஆண்டுகள் இல்லாத அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.ரகுபதி, செஞ்சி மஸ்தான், முத்துசாமி உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள் 13 பேரின் பதவி பறிபோகும் நிலை உருவாகி இருக்கிறது.

இவர்களுக்கு மாநில அளவில் பொறுப்புகள் வழங்கப்படுமா என்பது குறித்து செயற்குழு தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

====================