மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் திருமுறைகளும் தமிழ் மந்திரங்களும் ஓதப்படும் என்றும், இதற்காக நீதிமன்றம் தனியாக உத்தரவிடத் தேவையில்லை என்றும் கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு பின்னணி மற்றும் மனுதாரர்களின் கோரிக்கை
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
வரும் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில், சமஸ்கிருத மொழிக்கு இணையாகத் தமிழ் மொழியையும், தமிழ் மந்திரங்களையும் கட்டாயம் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின் விளக்கம்
மனுக்களை விசாரித்த நீதிபதி சி.சரவணன் முன்னிலையில், மீனாட்சி அம்மன் கோயில் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி விளக்கம் அளித்தார்:
"கோயிலின் தொன்மை மாறாத பாரம்பரிய நடைமுறைப்படி, வீரவசந்தராயர் மண்டபம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மந்திரங்களும், தேவார-திருவாசக பாராயணங்களும் முழுமையாக ஓதப்படும்." மீனாட்சி அம்மன் கோவிலின் வழக்கமான நடைமுறைகளே குடமுழுக்கிலும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.
கோவில் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டவை
கருவறை, யாகசாலை மற்றும் கோபுர கலச நன்னீராட்டு ஆகிய அனைத்து முதன்மை நிகழ்வுகளிலும் சமஸ்கிருத வேதங்களுக்கு இணையாகத் தமிழ் திருமுறை ஓதுவார்களும், பட்டர்களும் தமிழ் சைவ மந்திரங்கள், தேவாரம் மற்றும் திருவாசகத்தை ஓத அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து கோயில்களுக்கும் அறிவுறுத்தல்
"இறைவனுக்குத் தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் புரியும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழால் இறைவனைப் போற்றியதே இதற்கு சான்று.
எனவே தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழ்த் திருமுறைகளுக்கு சம முக்கியத்துவம் வழங்கப்படுவதை ஆணையர் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
மனுக்கள் தள்ளுபடி - நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
"சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் இடம்பெறுவது குறித்துக் குழு அமைக்க 2021-ல் ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தை சரியாக அமல்படுத்துவது மட்டுமே நீதிமன்றத்தின் பணி, புதிய சட்டத்தை அரசுதான் உருவாக்க முடியும்."
கோயில் தரப்பிலேயே தமிழ் ஓதப்படும் என உறுதியளிக்கப் பட்டதாலும், சட்டரீதியான குழு நிலுவையில் இருப்பதாலும் மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்கித் தனி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
=====