மத்திய பட்ஜெட் 2026-27
Union Budget 2026-27 Expectations for Tamil Nadu : தேர்தல் வரும் பின்னே...சலுகை மழை பொழியும் முன்னே என்பது அரசியல் அரிச்சுவடியின் அடிநாதம். கடந்தாண்டு பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அம்மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டன. அவை தேர்தல் பரப்புரையிலும் முதன்மைப்படுத்தப்பட்டன.
2021 பட்ஜெட் தமிழகத்திற்கான அறிவிப்புகள்
2021ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போதும், அப்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா அறிவிப்பு வெளியானது. அதே ஆண்டில் கடலோரப்பகுதிகள் வளர்ச்சிக்காக கடற்பாசி பூங்கா அறிவிப்பும் வெளியானது.
சென்னை மெட்ரோ-2.0க்கு நிதி ஒதுக்கீடு
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆவது கட்டத்திற்கு நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைகள் விரிவாக்க அறிவிப்பும் வெளியானது.
இதில் மதுரை - கொல்லம், சென்னை - சேலம், சென்னை - பெங்களூரு சாலைத் திட்டங்களும் அடங்கும். ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழித்தட திட்ட மேம்பாடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அம்ரித் பாரத் ரயில்கள்
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள் பலன்பெறும் வகையில் சுமார் 6 அம்ரித் பாரத் ரயில்கள் கடந்த ஒரு மாதத்தில் புதிதாக விடப்பட்டதும் கவனம் ஈர்த்துள்ளது.
பட்ஜெட்டில் சலுகை மழை
இதன் தொடர்ச்சியாக பட்ஜெட்டிலும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதற்காக சலுகை மழை பொழியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சட்டமன்ற தேர்தல் - அரசியல் கட்சிகள் முனைப்பு
தமிழகத்தை பொருத்த வரை சட்டமன்ற தேர்தலுக்கான எதிர்பார்ப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணி கணக்கை போட்டு, அதை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.
கூட்டணி, தொகுதி பங்கீடு
பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். அதற்குள் கூட்டணி, தொகுதிகளை இறுதி செய்தால், பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
கூட்டணி கணக்குகள் மாறுமா?
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க போகின்றன. எவை வெளியேற போகின்றன. விஜயின் தவெக என்ன செய்ய போகிறது? யாரை சேர்க்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.
மத்திய பட்ஜெட் - தமிழகத்திற்கு சலுகைகள்?
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதில் உறுதியாக நிற்கும் பாஜக, அதற்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் சலுகைகளை அறிவிக்கும் எனத் தெரிகிறது. என்வே, பிப்ரவரி முதல் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தமிழகத்திற்கு கிடைக்க போகும் பலன்கள் என்ன என்பது தெரிய வந்து விடும்.
================