Tamil Nadu Assembly session convenes on June 18! TVK government to present full budget;  source: google
தமிழ்நாடு

ஜூன் 18-ல் கூடுகிறது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர்! தவெக அரசின் முழு பட்ஜெட் தாக்கல்: ஆளுநர் உரையுடன் தொடக்கம்!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜூன் 18 முதல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடும் எனச் செயலாளர் சாந்தி அறிவிப்பு.

Kavitha prasanna

Tamil Nadu Assembly session convenes on June 18! TVK government to present full budget; proceedings to begin with the Governor's address!

தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டன.

முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு அறிவுரை

இந்தக் கூட்டத்தின் முடிவில், "லஞ்சம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் இல்லாத ஆட்சியாக நமது ஆட்சி இருக்க வேண்டும்" என்று முதல்வர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தவெக அரசின் முழு நிதிநிலை அறிக்கை

இந்த ஆண்டு தொடக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தவெக சார்பில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தவெகவுக்கு உதவிக்கரம்

முன்னதாக, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 35 பேர் இதுவரை 3 முறை விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற செயலாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற பேரவை செயலாளர் இரா. சாந்தி முறைப்படியான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரம்

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2026-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 18-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====