முதல்வர் விஜய் இதுவரை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்குச் செல்ல சுமார் 17 முதல் 19 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
சென்னையின் முக்கிய சாலைகள் வழியாக இந்தப் பயணம் அமைவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முதல்வர் விஜய் நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் செல்லும்போது, அவரது பாதுகாப்புக்காக வழிநெடுகிலும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
முதல்வரின் கான்வாய் செல்லும் நேரங்களில் சில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, அலுவலகங்களுக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தலைமைச் செயலகத்துக்கு அருகில் உள்ள அரசு இல்லத்துக்கு மாறுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை பசுமை வழிச்சாலையில் பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமணி இல்லம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்குச் சுமார் 15 நிமிடங்களில் சென்றுவிட முடியும் என்பதால், நிர்வாகப் பணிகளுக்கும் வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாமணி இல்லத்துக்கு 'வெற்றி இல்லம்' என்று பெயர் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
எனவே, உண்மையிலேயே இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
=====================