Tamil Nadu Congress leaders are undecided about who to Alliance with in the assembly elections google
தமிழ்நாடு

’திமுகவா? தவெகவா?’ மல்லுக்கட்டும் காங்கிரஸ் : திரளும் தலைவர்கள்

Tamil Nadu Congress Alliance with TVK or DMK? : சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கச்சை கட்டி நிற்கின்றனர்.

Kannan

எதிரும் புதிருமாக தமிழக காங்கிரஸ்

Tamil Nadu Congress Alliance with TVK or DMK? : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன்தான் கூட்டணியை தொடருவோம் என காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பும், தவெகவுடன் போகலாம் என இன்னொரு தரப்பும் கச்சை கட்டி நிற்பது நீடிப்பது கட்சிக்குள் பெரும் மோதலுக்கு வித்திட்டு இருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்

2004ம் ஆண்டு முதல் 2014 மக்களவைத் தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி(DMK Congress Alliance 2026) அங்கம் வகித்து வருகிறது. முரண்பாடுகள் வந்தாலும், தேசிய அளவிலான அரசியல் நகர்வுகள் மற்றும் பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்தே பயணிக்கின்றன.

ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக ”ஆட்சியில் பங்கு” என்ற காங்கிரசில் சிலர் எழுப்பும் முழக்கம் திமுகவை உசுப்பேற்றி இருக்கிறது. இது தவெகவுக்கு செல்வதற்கான சமிக்ஜை என சொல்லப்படுகிறது.

கூட்டணி - குரல் கொடுக்கும் காங்கிரசார்

காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு’ என்று திமுகவை கோபப்படுத்தும் ‘டோனில்’ பேச ஆரம்பித்தனர். இன்னும் சிலர் தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் இப்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.

திமுக கூட்டணி - மூத்த தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திமுக கூட்டணி வேண்டும் என்கின்றனர்.

தவெகவை விரும்பும் எம்பிக்கள்

அதே நேரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் தவெக கூட்டணிக்கு அடிபோடும் வகையில் ‘ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள்’ என கலகம் விளைவிக்கின்றனர்.

70 தொகுதிகளில் காங்கிரஸ்

தவெக கூட்டணி சென்றால் சுமார் 70 தொகுதிகளில் போட்டியிடலாம்(TVK Congress Alliance 2026 Seats). அதுமட்டுமின்றி ‘கிங் மேக்கர்’ கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கலாம். இளைஞர்கள் மத்தியிலும் கட்சியின் இமேஜை உயர்த்தலாம் என்பது இவர்களின் கணக்காக உள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்க முடியும் என்று அடித்து கூறுகிறார்கள், தவெக ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள்.

திமுக ஆதரவு தலைவர்கள் கருத்து

திமுக கூட்டணியை விரும்புவோர், தேசிய அளவில் திமுகவின் எம்பிக்கள் பலம் இண்டியா கூட்டணிக்கு அவசியம். பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திமுகவின் குரல் முக்கியம் என்பது இவர்களின் வாதம்.

கணக்கு பார்க்கும் காங்கிரஸ் தலைமை

தவெக கூட்டணியை விரும்புவோர் சொன்ன கருத்துகளையும் காங்கிரஸ் மேலிடம் கவனமாக பரிசீலிக்கிறது. காரணம், தவெகவுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் விஜய் ரசிகர்களின் வாக்குகளை காங்கிரசால் அறுவடை செய்ய முடியும். விஜயின் பிரசாரம் அந்தக் கட்சிக்கு பேராதரவை கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வப்பெருந்தகை நிலைப்பாடு

ஆனால், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நிலைப்பாடு என்னவென்றால், திமுக கூட்டணியில் சில தொகுதிகள் குறைவாக பெற்றாலும், அதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பது தான். 2029 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்தால், தமிழகத்தில் வெற்றி எளிதாகும்.

காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள்

தவெக பிரச்னை பூதகரமாக எழுந்தால், மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்டே காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் என்பதால், முடிவு எடுப்பதில் சிக்கல் வராது என்றும் கூறப்படுகிறது.

உச்சக்கட்ட கோபத்தில் திமுக

காங்கிரசில் எழும் எதிர்ப்பு குரல்கள்,திமுகவை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சில அமைச்சர்கள் காங்கிரஸ் மீது வசைமாறி பொழிகிறார். ‘வெண்ணெய் திரளும் நேரத்தில் பானையை உடைக்கக் கூடாது; பொறுமையுடன் இருப்போம்’ என்று அமைதி காக்கின்றனர்.

70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி

விஜய் தரப்பில் 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 10 அமைச்சர்கள் என்றெல்லாம் தூண்டில் போடுகிறது தவெக வட்டாரம். இதையே காரணமாக காட்டி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெறலாம், அதுவே போதும் என்கிறது செல்வப்பெருந்தகை வட்டாரம்.

ராகுல், கார்கே யோசனை

எனவே, திமுகவா, தவெகவா என்ற முடிவு ராகுல், கார்கே கையில் தான் இருக்கிறது. அவர்களின் விருப்பத்தை பொருத்தே தமிழக காங்கிரசின் எதிர்காலம் என்பது இருக்கப் போகிறது.

==============