பரபரக்கும் தமிழக அரசியல் களம்
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்களுக்கு இடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
2021ல் ஆளுநரான ஆர்.என். ரவி
தமிழகத்தின் 15வது ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021ம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். காவல் துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக அரசியல் கட்சிகள் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர்
ஆளுநராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்த ஆளுநர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை கேட்டு, அதனை பவர் பாயின்ட்டில் விளக்கும்படி உத்தரவிட்டார்.
ஆளுங்கட்சி எதிர்ப்பு
இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்பாடு இது என்றும் குற்றஞ்சாட்டினர்.
ஆளுங்கட்சியுடன் மோதல்
அதன் பிறகு, தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் அல்லது திருப்பி அனுப்புவது என மோதல் போக்கு தொடர்ந்தது. இதைக் கண்டித்து 2022ம் ஆண்டு முதல் ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்து திமுக புறக்கணித்து வருகிறது.
‘தமிழகம்’ சர்ச்சை கிளப்பிய ஆளுநர்
ஆளுநரின் அரசியலமைப்புக்கு எதிரான நடத்தை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் திமுக மனு அளித்து, அவரைத் திரும்பப் பெறக் கோரியது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு” என்பதற்குப் பதிலாக “தமிழகம்” என்பதே மிகவும் பொருத்தமான சொல் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
மசோதாக்கள் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஜூன் மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் அதிரடியாக நீக்கினார். பின்னர், அந்த உத்தரவை அவரே திரும்பவும் பெற்றார்.
அக்டோபர் மாதம், ஆளுநர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையின்றி தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஆளுநரின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் தங்களது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியதாக உத்தரவிட்டது.
விமர்சனங்களில் சிக்கிய ஆளுநர்
காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படத்தை ஆளுநர் மாளிகை அச்சிடப்பட்டு, விமர்சனங்கள் எதிர்கொண்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார் ஆளுநர் ரவி.
பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ரவி
2022ம் ஆண்டு மட்டும் சட்டசபையில் ஆளுநர் உரையை முழுமையாக படித்த அவர், 2023ல் அரசு தயாரித்த உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்து, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
இதேபோன்று 2024, 25, 26 ஆம் ஆண்டுகளில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற காரணத்தை எழுப்பி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்ததால், ஒவ்வொரு விவகாரமும் சர்ச்சையில் தான் முடிந்தது.
ஆளுநர் ரவி மாற்றம்
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்
புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக பதவி வகிக்கும் அவருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
===========================