Tamil Nadu Prisons DGP Sandeep Rai Rathore Transferred; Is the Recent Theni Incident the Reason? Google
தமிழ்நாடு

தேனி சிறை சம்பவம் எதிரொலி தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்!

சமீபத்தில் தேனியில் நடந்த சம்பவத்தால் மாற்றமா என கேள்வி ?

NARENDRAN K

சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் :

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக சிஐடியின் அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பணியிட மாற்றம் கவனம் பெற்றுள்ளது.

மின்வாரியத் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றம்:

சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை தலைவராக இருந்த அவருக்குப் பதிலாக கே. சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையின் சில மூத்த அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேனி சிறையில் நடந்தது என்ன?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி துணைச் சிறையில் அக்டோபர் 26-ம் தேதி இரவு 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.

இதையடுத்து, கைதிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி ஒன்பது சிறைத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்து கைதிகள் தப்பிய சம்பவங்கள் :

தேனி சிறைச் சம்பவத்திற்கு முன்பாக, சென்னை புழல் சிறையிலிருந்தும் இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் பதிவாகியிருந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் சிறைகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்தச் சூழலில் சந்தீப் ராய் ரத்தோரின் பணியிட மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இருப்பினும், தேனி சம்பவமே இந்த இடமாற்றத்திற்கான நேரடிக் காரணம் என்று அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதா என்பது தெளிவாக இல்லை.

===================