Tamil Nadu Rains: 14 Killed by Lightning, ₹4 Lakh Compensation for Each Family says Revenue Minister K.A.Sengotayan Google
தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது ,எனவே இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார் ...

NARENDRAN K

செங்கோட்டையன் விளக்கம் :

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், மழை பாதிப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன :

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று கூடுதலாக மழை பெய்துள்ள நிலையில், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் 62 இடங்களில் நிலச்சரிவு:

நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், தற்போது அனைத்து இடங்களிலும் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு:

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளின் அடிப்படையில், அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேகங்களின் நகர்வைக் கணிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்:

மழை பாதிப்புகள் ஏற்படக்கூடிய மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுப்பதற்காகச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

==================