Tamil Nadu Road Accidents Statistics 2026 Analysis source: ai generated
தமிழ்நாடு

தமிழகத்தில் தொடரும் சாலை விபத்துகள்..பலியாகும் உயிர்கள்...பதறவைக்கும் புள்ளிவிவரங்கள்...! ஓர் விரிவான அலசல்...

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டின் 9 மாதங்களில் 56,602 சாலை விபத்துகளில் 14,373 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

Kavitha prasanna

Tamil Nadu Road Accidents Statistics 2026 Analysis

அச்சுறுத்தும் சாலை விபத்துகள்

சாலை விபத்துகள் என்பது தமிழகத்தில் நாளுக்கு நாள் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. தினம் தினம் பணிக்கு செல்வோர், வியாபரத்திற்காக செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அன்றாடம் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் இரவு வீடு திரும்பிவிடுவோமா என்ற அசாதாரண நிலை காணப்படுகிறது.

2026 அதிர்ச்சிப் புள்ளிவிவரங்கள்

இந்நிலையில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையை எடுத்துரைக்கும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 14,373 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து உள்ளதாகவும், சராசரியாக ஒரு நாளைக்கு 53 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் சராசரியாக 2027 விபத்துகள்

சமீபத்தில் தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு நிலை குறித்துவெளியான புள்ளி விவரங்களின் படி, இந்த ஆண்டின் ( 2026) ஜனவர் முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 56,602 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், தினமும் சராசரியாக 207 விபத்துகள் நடக்கின்றன.

கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தினசரி சராசரியாக 195 விபத்துகளும், 51 உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருந்தன. அதோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு உயிரிழப்புகளும், விபத்துகளும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் விபத்துகளின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் சற்று ஆறுதல்

ஒருபக்கம் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சென்னையில் மட்டும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

கடந்த 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சென்னையில் மட்டும் 420 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 402 ஆக குறைந்துள்ளது நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதேபோல், விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 2997ல் இருந்து தற்போது 2865 ஆக குறைந்துள்ளது.

சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது தலைக்கவசம் அணியாததுதான். இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துகளுக்கான முக்கியக் காரணங்களும் கள நிலவரமும்

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் 1.17 லட்சம் இருசக்கர வாக ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது தலைக்கவசம் அணியும் வாகன ஓட்டிகளின் சதவீதம் 95 % உயர்ந்துள்ளது.

இருப்பினும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களின் இந்தப் பழக்கம் 50% மட்டுமே இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாகனம் இயக்குபவருக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு அவசியமோ, அதே அளவு பின்னால் இருப்பவரின் உயிருக்கும் பாதுகாப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்த விபத்துகளுக்குப் பின்னால் இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. தற்போது வரை நமது மாநிலத்தில் 4.1 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 முதல் 2025 வரையில் 17% இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் தான் விபத்துகள் ஏற்படுவதாக ஓர் எண்ணம் உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏனெனில், 2025 ஆம் ஆண்டில் பதிவான விபத்துகளில் 31% தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. அதேசமயம், சுமார் 70% விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு உள்ளே உள்ள சாலைகளில் தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு நடவடிக்கைகள் மற்றும் அவசர சிகிச்சைத் தேவை

தமிழகத்தில் 7723 ஆபத்தான சாலைப் பகுதிகள் விபத்து ஏற்படும் பகுதிகளாக கணக்கிடப்பட்டு, அவற்றுள், 5356 இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கிராமப் புறங்கள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் ஏற்படும் விபத்துக்குள்ளான இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர காலதாமதம் ஏற்படுகிறது. இதன்காரணமாக உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் போய் விடுகிறது. இதற்காக அவசர சிகிச்சைககளை மேம்படுத்துவது, ஆம்புலன்ஸ் சேவைகளை வலுப்படுத்துவதும் அவசியமானதாகிறது.

நமது பொறுப்பு என்ன?

விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினரும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நாமும் நமது பங்கிற்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் .

குறிப்பாக இருசக்க வாகனம் ஓட்டும் போது இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், காரில் பயணம் செய்யும் போது சீட்பெல்ட் போட வேண்டும், தேசிய சாலைகளில் பயணம் செய்யும் போது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் மனதில் வைத்து ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மேற்கொள்வோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். பயணம் எப்போதும் நமக்கானது மட்டும் அல்ல... அதில் பல குடும்பங்களின் கனவுகளும், நம்பிக்கையும் நிறைந்துள்ளன.

=======