Tamil Nadu Should Be Declared a Drought-Affected State: Anbumani Ramadoss Urges Government” Google
தமிழ்நாடு

தமிழ்நாட்டை ”வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...

Anbumani Ramados தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

NARENDRAN K

அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தல் :

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் தற்போதைய நீர் நிலவரம் குறித்து பல்வேறு புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

14 ஆயிரம் நீர்நிலைகளில் மோசமான நிலை :

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அன்புமணி, மாநிலத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 14,141 நீர்நிலைகளில் 4,208 நீர்நிலைகள் முழுமையாக வறண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 5,814 நீர்நிலைகளில் 1 முதல் 25 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டன :

காவிரி பாசன மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதாக அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை :

வறட்சி நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000, தண்ணீர் இல்லாமல் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பா சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடனடி நடவடிக்கை தேவை :

பருவமழை பொய்த்தது மற்றும் காவிரி நீர் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அரசு உடனடியாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் .

=============