Tamil Nadu's first transgender government bus driver: Transgender individuals on the path to achievement!
சாதனைப் பாதையில் திருநங்கைகள்
தமிழ் சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை சமீபகாலமாகவே நேர்மறையான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
பொதுப் போக்குவரத்துத் துறையில் தடம் பதித்த முதல் திருநங்கை
கல்வி, மருத்துவம், காவல்துறை எனப் பல துறைகளில் தங்களது திறமையால் முத்திரை பதித்து வரும் திருநங்கைகள், தற்போது ஆண்கள் மட்டுமே அதிகம் ஆதிக்கம் செலுத்திய பொதுப் போக்குவரத்துத் துறையிலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீதேவி, தமிழகத்தின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
தடைகளைத் தகர்த்த சாதனை பயணம்
சாலைகளில் இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கே பலரும் தயங்கும் இன்றைய சூழலில், கனரக வாகனமான அரசுப் பேருந்தை மிகுந்த துணிச்சலுடனும், பாதுகாப்புடனும் இயக்கி வருகிறார் ஸ்ரீதேவி.
தற்காலிக ஓட்டுநர் பணி
ஓட்டுநர் பயிற்சி முடித்த இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்கப்பட்டது.
தற்போது, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கு இணையாக மிக லாகவமாக பேருந்தை இயக்கி அசத்தி வருகிறார்.
இவருடன் இணைந்து புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் நடத்துனராக பணிபுரிந்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும்.
அரசிடம் வைக்கும் உருக்கமான கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசினா ஆகியோரின் உறுதுணையோடு இந்த நிலையை எட்டியுள்ளதாகக் கூறும் ஸ்ரீதேவி, தமிழ்நாடு அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உழைத்து சாதிக்க வேண்டும்
"இதை நான் வெறும் வேலையாகப் பார்க்கவில்லை; மனதார விரும்பி செய்கிறேன். மக்களுக்கு சேவை செய்வது மனதிருப்தியைத் தருகிறது. எங்களைப் போன்றவர்கள் யாசகம் எடுப்பதைத் தாண்டி, உழைத்து சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிகப் பணியை அரசு நிரந்தரமாக்க வேண்டும். அது என் சமூகத்திற்குக் கிடைக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும்" என்று ஸ்ரீதேவி உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் முதல் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியமர்த்தப்பட்டுள்ள ஸ்ரீதேவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
=====