Tamil Nadu's local body elections, multi-post EVMs capable of facilitating voting for multiple posts AI generated
தமிழ்நாடு

”உள்ளாட்சித் தேர்தலும் EVM” : ஒரே சமயம் 4 பதவிகளுக்கு வாக்களிக்கும் வசதி : வாக்குச்சீட்டு முறை இருக்காது...!

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில், முதன்முறையாகப் பல பதவிகளுக்கு வாக்களிக்கும் வசதியுடன் கூடிய மல்ட்டி போஸ்ட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Kannan

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டியுள்ளதால், வாக்குச் சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குச்சீட்டு முறைக்கு முடிவு

நான்கு பதவிகளுக்கும் வாக்கு செலுத்தும் வசதி கொண்ட மின்னணு இயந்திரங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். இதன்மூலம், தமிழகத்தில் இனி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்பதே இருக்காது.

இதற்காக பெங்களூரு பெல் (BEL) நிறுவனத்திடமிருந்து 53,000 இயந்திரங்களைப் பெற்று மாநில தேர்தல் ஆணையம் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இவை பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 2019 தேர்தலில் கன்னியாகுமரியின் மேல்புறத்தில் இந்த இயந்திரம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி மெஷினில் வாக்களிக்க வேண்டும்

ஒவ்வொரு வாக்காளரும் ஒரே கட்டுப்பாட்டு அலகுடன் (Control Unit) இணைக்கப்பட்ட 4 தனித்தனி வாக்குப்பதிவு இயந்திரங்களில் (Ballot Units) தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் (Post) தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units) வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களின் சின்னத்திற்கு நேராக உள்ள நீல நிற பொத்தானை அழுத்த வேண்டும். இப்படி நான்கு இயந்திரங்களிலும் அடுத்தடுத்து வாக்கினை செலுத்த வேண்டும்.

நான்கு இயந்திரங்களிலும் வாக்களித்த பின்னரே வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

நான்காவது இயந்திரத்தில் வாக்களித்ததும் வரும் 'பீப்' (Beep) சத்தம், உங்கள் வாக்கு முழுமையாக பதிவானதை உறுதி செய்கிறது.

இந்த இயந்திரங்கள் ஒரே நேரத்தில் ஒரு வாக்காளர் நான்கு பதவிகளுக்கும் தவறின்றி வாக்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இயந்திரத்தின் வாக்கு எண்ணிக்கையும் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.

வாக்குசீட்டுக்கு குட்பை

தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், இனி வாக்குச்சீட்டு முறை என்பதே இருக்காது.

=================