பொதுக்கூட்டங்கள் - வழிகாட்டு் நெறிமுறை
Tamil Nadu Government on Public Meeting : கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு பொது வழிகாட்டு முறைகளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி, அவர்கள் தெரிவித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விவரங்கள் வருமாறு :
* கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு, அதற்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* 5,000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிமுறையானது பொருந்தும்.
* வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
* நிகழ்ச்சி தொடங்க 2 மணி நேரத்திற்கு முன்பு, தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* நிகழ்ச்சியின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களே ஏற்க வேண்டும்.
* அனுமதிக்கப்படும் நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* நிகழ்ச்சிக்கான அனுமதி விண்ணப்பத்தில், ஆம்புலன்ஸ், அவசர உதவி உள்ளிட்ட விவரங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
* திடீரென ஏற்பாடு செய்யும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு, ஆட்சியர், காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.
* ரோடு ஷோக்களை பொருத்தவரை பிரச்சாரத்தை துவங்கும் இடம், முடிக்கும் இடங்களை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும்.
* நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நகல்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்களான அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தன.
ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு கட்சிகளும் எதிர்க்கும் என்பதால், வரைவு விதிமுறைகளின் நகல்களை வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
நகல்களை வழங்க நீதிபதி உத்தரவு
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழிகாட்டு வரைவு நெறிமுறைகளின் நகல்களை வழங்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
===