TASMAC Liquor Procurement Equal Orders To All Manufacturers Tamil Nadu google
தமிழ்நாடு

மதுபான கொள்முதலில் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி மாற்றம் : இனி அனைவரிடமும் சம அளவு கொள்முதல் செய்ய முடிவு!

டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானக் கொள்முதலில் புதிய மாற்றம். 17 உற்பத்தியாளர்களிடம் இருந்தும் இனி சம அளவில் கொள்முதல் செய்யப்படும் என தகவல்.

Kavitha prasanna

TASMAC Liquor Procurement Equal Orders To All Manufacturers Tamil Nadu

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்குத் தேவையான இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை, டாஸ்மாக் நிர்வாகம் தயாரிப்பாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், மதுபானக் கொள்முதல் நடைமுறையில் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

டாஸ்மாக் அதிகாரிகளின் விளக்கம்

இதுவரை சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்களிடம் மட்டுமே அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் நிர்வாகம் தற்போது மொத்தம் 17 மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.

இதுவரையில் ஒவ்வொரு பிராண்டின் 3 மாத சராசரி விற்பனையையும், முந்தைய வார விற்பனையையும் ஒப்பிட்டே கொள்முதல் ஆணைகள் அதாவது Purchase Orders வழங்கப்பட்டு வந்தன.

நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்

இந்த நடைமுறை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், தற்போது அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களின் தேர்வை அதிகரிக்கும் வகையிலும் கொள்முதல் ஆணைகள் சம அளவில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் எழுப்பியுள்ள கவலை

அதிகாரிகளின் இத்திட்டத்தைத் தொடர்ந்து , டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்ட மதுவகைகள் கிடைக்காமல் போகலாம்?

அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் கொள்முதல் செய்தால், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் குறிப்பிட்ட மதுவகைகள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

அதிக தேவையுள்ள மதுபானங்களை விட்டுவிட்டு அனைத்தையும் சமமாக வாங்குவது, மறைமுகமாக சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாகவே முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

=====