திருப்பரங்குன்றம் மலை
திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 1920ம் ஆண்டுக்கு முன்பு இங்குள்ள தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இதற்கு தடை பிறப்பிக்கப்பட்டு, இன்று வரை அமல்படுத்தப்படுகிறது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற வழக்கு
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தான் முறையாக தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து முன்னணி சட்டப்பிரிவு செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சி வரை நேரில் சென்று ஆய்வு செய்து, 'தீபம் ஏற்றலாம்' என உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை அமல்படுத்தாத அறநிலையத்துறை, உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இம்மனு ஏற்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக்கூறி ராம ரவிக் குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
மேல்முறையீடு - நீதிபதிகள் ரத்து
தமிழக அரசின் மேல்முறையீட்டு நேற்று விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, அதை தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசுக்கு கண்டனம்
இதையடுத்து நேற்று இந்த வழக்கை மீண்டும் விசாரித்த ஜி.ஆர் சுவாமிநாதன், உத்தரவை அமல்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். போலீசார் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த அவர், காணொலியில் கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் லோகநாதனிடம் விசாரித்தார். அவர்களின் பதில்கள் ஏற்கும்படியாக இல்லாததால், இரவு (நேற்று) 7:00 மணிக்குள் மனுதாரர்(ராம ரவிகுமார்) தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு
அவருக்கு கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றியது குறித்து நாளை(இன்று) காலை 10:30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்டார்.
அனுமதி மறுப்பு - மீண்டும் பதற்றம்
இதையடுத்து, இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை காண குவிந்தனர். ராம ரவிக்குமார், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மலைக்கு செல்ல தயாரான போது, '144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது' என கமிஷனர் லோகநாதன் அறிவித்தார். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
முக்கிய தலைவர்கள் கைது
இரவு 8.00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. இச்சூழலில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, திருமுருகன், முருகன்ஜி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
திமுக அரசின் தொடர் பிடிவாதத்தால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே இருநீதிபதி அமர்வு அளித்த உத்தரவுக்கு எதிராக நேற்றிரவு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளது.
===============