Thanjavur Thiruvaiyaru Banana Leaf GI Tag Expectation ai
தமிழ்நாடு

'திருவையாறு தலைவாழை இலைக்கு' புவிசார் குறியீடு கிடைக்குமா? : காத்திருக்கும் தஞ்சை விவசாயிகள்!

திருவையாறின் தனித்துவமிக்க 13 அடி நீள தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என டெல்டா பகுதி வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kavitha prasanna

Thanjavur Thiruvaiyaru Banana Leaf GI Tag Expectation

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தனித்துவமிக்க "தலைவாழை இலைக்கு" புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே பல ஆண்டுகளாகத் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தின் 60% தேவையைப் பூர்த்தி செய்யும் திருவையாறு

திருவையாறு பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழை இலைகள் தினமும் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், திருச்சி, புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

60% தேவையை பூர்த்தி செய்யும் திருவையாரு

தினசரி சுமார் 50 லட்சம் வாழை இலைகள் பல்வேறு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழை இலை தேவையில் 60 சதவீதத்தை திருவையாறு பகுதியே பூர்த்தி செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து வாழைத் தார்கள், வாழைக்காய்கள் மற்றும் வாழைப்பழங்கள் பெருமளவில் அனுப்பப்படுகின்றன.

திருவையாறு இலையின் தனிச்சிறப்புகள்

  1. அளவு மற்றும் தரம்: காவிரி படுகையின் வளமான வண்டல் மண்ணில் விளையும் இந்த இலைகள், சுமார் 13 அடி நீளமும் 2½ அடி அகலமும் வளரக்கூடியவை.

  2. சந்தையில் முன்னுரிமை: இதன் தடிமன் மற்றும் அடர் பசுமை நிறம் காரணமாகத் தமிழகத்தின் முன்னணி உணவகங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இந்த இலைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  3. 60% விநியோகம்: திருவையாறு பகுதியிலிருந்து தினமும் சுமார் 50 லட்சம் இலைகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, தமிழகத்தின் 60 சதவீதத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகள்

தஞ்சை தலையாட்டி பொம்மை, வீணை போன்ற பாரம்பரியப் பொருட்களின் வரிசையில், தலைவாழை இலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் உலகச் சந்தையில் நல்ல மதிப்பு கிடைத்து விவசாயிகளின் வருமானம் உயரும் என வடுகக்குடி விவசாயி மதியழகன் தெரிவித்துள்ளார்.

பதப்படுத்தும் தொழிற்சாலை

உற்பத்தி அதிகமாகும் காலங்களில் வாழைப்பழங்கள் வீணாவதைத் தடுக்க, இப்பகுதியில் வாழை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

சத்துணவில் வாழைப்பழம்

பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், நிலையான சந்தையை உருவாக்கவும் காலை உணவு மற்றும் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்குச் சில நாட்களாவது வாழைப்பழம் வழங்க வேண்டும்.

தஞ்சையின் பெருமையாக விளங்கும் தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவதும், பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பதும் இப்பகுதி வாழை விவசாயிகளின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது.

======