சட்டமன்றத்தில் நடந்த விவாதம் :
முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது அவரை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் திமுக அரசு இடம் தர மறுத்தது” என காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் தாரகை கத்பர்ட் நேற்று குற்றம்சாட்டியதற்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதாரத்துடன் விரிவான பதிலடி தந்துள்ளார்.
தங்கம் தென்னரசு பதில் :
நேற்றைய தினம் இந்த அவையிலே உரையாற்றிய காங்கிரஸ் கட்சின் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பர்ட், “கலைஞர் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிக்காலத்தில், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையிலே, அவருடைய திருவுடல் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக” ஒரு செய்தியை இங்கே பதிவு செய்தார்.
வரலாற்று பக்கங்களை எடுத்துரைத்த தங்கம் தென்னரசு :
இந்தப் பேரவையிலும் பிழையான செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகிவிடக் கூடாது என்கின்ற அடிப்படையில், சில விளக்கங்களை நான் இங்கே அளிப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காலையில் இயற்கை எய்தினார்.
அவர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர், உடனடியாக காமராஜருடைய இல்லத்திற்கு விரைந்து சென்று, அவருக்கு மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி கூறியதை எடுத்துரைத்த தங்கம் தென்னரசு :
ஆனால் முதல்வர் கருணாநிதி, “காமராசர் பெருந்தலைவர்; காமராசர் ஏதோ காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மாத்திரம் கிடையாது.
அவர் ஒரு பெரிய தேசியத் தலைவர். அவரை உரிய முறையிலே நாம் அடக்கம் செய்து, நினைவிடம் கட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், அவருடைய திருவுடலை உடனடியாக ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டுவந்து, முழு அரசு மரியாதையோடு அங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கையும் எடுத்தார்.
இதுகுறித்து சபாநாயகர் பேசுகையில் :
இதனையடுத்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “தங்கம் தென்னரசு இந்த குறிப்பை படிக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, சில வரலாற்று குறிப்புகள் இப்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்கின்ற காரணத்தினால்தான் அதை படிக்க அனுமதித்தேன்.
அந்த காலகட்டத்தில் கட்சி ஆட்சிகளை எல்லாம் மறந்து கொள்கை வேறுபாடு எல்லாம் மறந்து ஒருவருக்கொருவர் எப்படி அன்போடும் பண்போடும் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தாரகை கத்பர்ட், நீங்க அந்த பிரச்சினையை இங்கே குறிப்பிட்ட காரணத்தினால் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இது குறித்து சர்ச்சையில்லாமல் ஏதாவது நீங்கள் சொல்ல வேண்டுமானால் சொல்லலாம்” என்றார்.
============