தவெக வேண்டுகோள்
vijay with whistle வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
ஒதுக்கப்பட்ட 10 சின்னங்களில், குறிப்பாக விசில், ஆட்டோ, மட்டைபந்து,என 3 சின்னங்களை சமர்பித்தது. இதில் எந்த சின்னம் தவெகவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
விசில் சின்னம் குறித்து மனம் திறந்த நிர்மல் குமார்
அதாவது, அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேநேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘‘தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பத்திருந்தோம்.
விண்ணப்ப படிவத்தில் 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். முதல் சின்னமாக விசில் சின்னத்தை தலைவர் விஜய் கேட்டிருந்தார். எங்கள் தலைவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசில் சின்னம் வரவேற்பு
தவெக வேண்டுகோளுக்கு இணங்க சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த தேர்தலை ஆணையம், தேர்தலுக்கு அடிப்படை தேவையான, சட்டப்படி முறையான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்தில் தவெக சமர்பித்தனர், என்றும் தெரிவித்துள்ளனர். ஆரம்பம் காலம் முதலே தவெக தலைவர் விஜய்க்கு, வி என்னும் எழுத்து வெற்றி வாகை சூடி தரும் என்று அவரது ரசிகர்கள் முதல், தொண்டர்கள் வரை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, தனது பெயரின் முதல் எழுத்தான “வி” என்பதை கருத்தில் கொண்டே, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் “வி ” என்ற எழுத்து சேர்ததாகவும், தற்போது தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள விசில் சின்னத்தின் முதல் எழுத்தும் வி என்பதில் ஆரம்பமாகியுள்ளதால், இந்த வி தான் வெற்றிக்கான அறிகுறி என தவெக கட்சியினர் பலரும் வி என்னும் எழுத்தை மையப்படுத்தி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் 234 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.