the name of the TVK alliance will be announced at the meeting scheduled for the 9th. google
தமிழ்நாடு

”தவெக கூட்டணி பெயர்” : செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு : முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை...!

தவெக கூட்டணிக்கான பெயர் வரும் 9ம் தேதி நடைபெற்றும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Kannan

கூட்டணி ஆதரவோடு தவெக ஆட்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

கோவளத்தில் முதல் ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், கூட்டணியை வலுவாக உருவாக்க தவெக திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. மற்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

செப்.9ல் 2வது ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் சென்னையில் செப்.9ம் தேதி நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் - இ.கம்யூ

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், ‘‘தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில் நாங்கள் பங்கேற்க இயலாததால், முதல்வரைச் சந்தித்து தெளிவுபடுத்தினோம்.

இப்போதும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தற்போது வரை அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சி, தனது கருத்துகளை முன்வைக்கும்போது அதற்கு மதிப்பளித்து, எங்களது கட்சி தலைமையிடம் அதை தெரிவிப்போம்” என்றார்.

ஆலோசனையில் மதிமுக பங்கேற்பு

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பதாக வைகோ உறுதியளித்துள்ள தாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் குழு தொடர்ந்து விசிக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

பனையூரில் ஆலோசனை கூட்டம்

முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் யார் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதி செய்யப்படும் கூட்டணி பெயர்

கூட்டணியின் பெயர் இறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்து இருக்கிறார்.

ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்

ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். அந்த சர்ச்சை முடிந்துபோன கதை என்றும் அவர் கூறினார்.

மதச்சார்பற்ற கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த பல விதத்தில் பாடுபடுகின்றன. அது தோல்வியுறும். தேசிய, மாநில அளவில் மதச்சார்பற்ற, சமூகநீதியை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபோடுவோம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், இதை நாங்கள் தெளிவாக எடுத்துச் செல்வோம். இந்திய அளவில் ராகுல் காந்தி இதற்கான பொறுப்பை எடுத்துச் செல்வார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பனையூரில் செப்.9-ல் நடைபெறும் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம்; இந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தக் கூட்டணி நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும். பலமாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்து எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்,“ என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

================