there is a possibility of Congress allocating a vacant Rajya Sabha seat in Tamil Nadu. google
தமிழ்நாடு

ராஜ்யசபா எம்பியாகிறார் பிரவீன் சக்ரவர்த்தி? : காங்கிரஸ் கோரிக்கை, தவெக திட்டம் என்ன?

தமிழகத்தில் காலியாகி உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தை காங்கிரசுக்கு தவெக ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Kannan

எம்பி பதவியை ராஜினாமா செய்த சண்முகம்

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜ்யசபா தேர்தல்

இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு ஜூன் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அஜித்பவார் மறைவையடுத்து, பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவரது மனைவி சுநேத்ரா பவார், ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக உள்ள இந்த இரண்டு இடங்களுக்கும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல, 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் நிறைவடைகிறது.

கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா, மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங், ஜார்ஜ் குரியன் ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளன.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஜூன் 1 முதல் 8 வரை தாக்கல் செய்யலாம். போட்டி இருந்தால், தேர்தல் நடைபெறும்.

தவெகவிற்கு முதல் வாய்ப்பு

தமிழகத்தை பொருத்தவரை புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். தவெகவிற்கு சட்டசபையில் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 34 எம்எல்ஏக்கள் இருந்தால், ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்ந்து எடுக்க முடியும்.

தவெக நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பு

எனவே, தவெக வேட்பாளர் நிறுத்தப்பட்டால், போட்டி இருக்காது. அவர் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவார். இதன்மூலம் சட்டமன்ற தேர்தல் வெற்றியோடு நாடாளுமன்றத்திலும் தவெக கால் பதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பிரவீன் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு

தவெகவுடன் கைகோர்த்து இருக்கும் காங்கிரஸ், ராஜ்யசபா எம்.பி. சீட்டை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

தவெக – காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பிரவீன் சக்ரவர்த்தியை நிறுத்தவும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

=====