Thiruparankundram Deepam Row Intensifies as Aadheenams Raise Questions Over Agama Rules Google
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : அறங்காவலர் குழுவுக்கு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு...!

தீபதூணில் தீபம் ஏற்றுவதே பாரம்பரிய வழக்கம் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை விட அறங்காவலர் குழுவின் முடிவு பெரிதல்ல என்றும் ஆதீனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

NARENDRAN K

முன்னோர்கள் பின்பற்றிய வழக்கத்தை தொடர வேண்டும் பேரூர் ஆதீனம் :

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் முன்னோர்கள் பாரம்பரியமாக தீபம் ஏற்றி வழிபட்டு வந்ததாக குறிப்பிட்டார்.

எனவே, அதே வழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அறங்காவலர் குழு தெரிவிக்கும் காரணங்கள் ஆதிக்க சக்தியின் வெளிப்பாடு என்றும், தீபம் ஏற்ற கோருபவர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் என்பதால் தீபம் ஏற்றுவதைத் தவிர்ப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

1994-க்கு பிறகுதான் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது சிரவை ஆதீனம் :

சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், நாயக்கர் காலத்தில் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்த தூண்களில் தீபம் ஏற்றப்பட்டதாக தெரிவித்தார்.

முதலில் சமணர்கள் தீபம் ஏற்றி வழிபட்டதாகவும், அதன்பிறகு இந்துக்கள் அந்த வழக்கத்தை தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஏதோ காரணத்தால் 1994-க்கு பிறகுதான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டதாகவும், தீபம் ஏற்றியதற்கான வரலாற்று சான்றுகள் இலக்கியங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவை விட அறங்காவலர் குழு முடிவு பெரிதல்ல காமாட்சிதாச சுவாமிகள் :

அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததற்கு கூறப்படும் காரணங்கள் உண்மையானவை அல்ல என்றும், மக்களை திசைதிருப்புவதற்காக பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை விட அறங்காவலர் குழுவின் தீர்மானம் பெரிதல்ல என்றும் தெரிவித்தார். திருவண்ணாமலை, மருதமலை உள்ளிட்ட இடங்களில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், ஆகம விதிகளின்படி தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆகம விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர் – அர்ச்சகர் பாஸ்கர் கவுசிகன் :

அர்ச்சகர் பாஸ்கர் கவுசிகன் பேசுகையில், முருகப்பெருமானின் வழிபாட்டு முறைகளை விளக்கும் குமார தந்திர ஆகமத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு தீபம் ஏற்றப்படாவிட்டால் ஆட்சியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

==================