TN Assembly election 2026 campaign heats up, the DMK Congress has held seat-sharing talks with 9 parties in a single day google
தமிழ்நாடு

தமிழக அரசியல் களம் : ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை ; தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க திட்டம்

DMK Alliance Parties Seat Sharing Talks 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அனல்பறக்க தொடங்கி விட்ட நிலையில், திமுக ஒரே நாளில் 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.

Kannan

DMK Alliance Parties Seat Sharing Talks 2026 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களை இருக்கும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிக் கட்டத்த நோக்கி நகர்ந்து வருகிறது. நான்கு முனைப்போட்டி உறுதியாகி விட்ட நிலையில், திமுக தனது கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்து வலுப்பெறுவதில் முனைப்பு காட்டுகிறது.

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று ஒரே நாளில் 9 கூட்டணி கட்சிகளை அழைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 22ம் தேதி முறைப்படி தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டும் வகையில் வேகம் எடுத்துள்ளது.

காலையில் காங்கிரசுடன் பேச்சு

இன்று காலை, காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்ட சூழலில், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவும், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் ஆலோசனையில் ஈடுபட்டன.

காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்

கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று மாலை கொங்கு இளைஞர் பேரவை, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றன:

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK) ஆகியவற்றுடன், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைநடைபெறுகிறது. இன்றைய ஆலோசனையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

கம்யூனிஸ்டுகள் கோரிக்கை

முன்னதாக நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, இந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மார்ச் முதல் வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

=========