DMK Govt Disburses Rs 9000 Benefits in Last 30 Days Ahead TN Election 2026 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன.
திமுகவுக்கு சவாலாகும் தேர்தல்
விஜயின் வருகை, அதிமுக கூட்டணி வலுப்பெறுவது, ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ், அதிக இடங்களை கேட்கும் கூட்டணி கட்சிகள் திமுகவிற்கு சவாலாக உருவெடுத்து இருக்கிறது.
ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி
மகளிர் விடியல் பயணம், மாதந்தோறும் உரிமைத் தொகை, நான் முதல்வன் எனஅடுக்கடுக்கான திட்டங்களை திமுக செயல்படுத்தினாலும் ஆம்ஸ்டராங் கொலை, அஜித்குமார் மரணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு என அரசுக்கு எதிரான மனநிலை இருக்கிறது.
பொங்கலுக்கு ரூ. 3,000
சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பும், ஆட்சி மீதான அதிருப்தியை அதிகரித்து இருக்கிறது. இதனை சரிகட்டும் வகையில் தான், பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகுப்பாக கொடுக்கப்பட்டது.
மகளிருக்கு ரூ.5,000
பொங்கல் பண்டிகை முடிந்து ஒருமாதம் முடிவதற்குள், மகளிர் உரிமைத் தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கிலும் 5 ஆயிரம் ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டது. இது மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
30 நாட்களுக்குள் 9 ஆயிரம் ரூபாய்
இதன்மூலம் 30 நாட்களுக்குள் 9 ஆயிரம் ரூபாயை நலத்திட்ட உதவியாக திமுக ஆட்சி அளித்து இருக்கிறது. இதன்மூலம் மக்களுக்கு ஆட்சி மீது இருக்கும் அதிருப்தியை சரிக்கட்டி, வாக்குகளை அள்ளலாம் என திமுக கணக்கு போடுகிறது.
தேர்தலில் பெரிய தாக்கம்
குறிப்பாக 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பதன் மூலம், அவர்களின் வாக்குகளை உறுதி செய்ய திமுக திட்டமிட்டு செயல்படுகிறது.
ஒரு மாதத்தில் 9 ஆயிரம் வரவு என்பது, குடும்பங்களுக்கு பயன் அளித்து இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதுபற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருக்கிறது. அப்படி இருக்கையில் இப்படி பணத்தை அள்ளிக் கொடுப்பதை இன்றைய தலைமுறை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இலவசங்களை எதிர்க்கும் இளைய தலைமுறை
விலைவாசி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின்சார கட்டணத்தை குறைக்காமல், வெறும் பணத்தை கொடுப்பதன் மூலம் எந்த பயனும் இல்லை. இது ஓட்டுக்களை பெற கொடுக்கப்படும் லஞ்சம் என்றே இளைய தலைமுறை கருதுகிறது.
அரசுக்கு எதிராக போராட்டங்கள்
தூய்மை பணியாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இவர்களுக்காக குரல் கொடுத்த 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களை திரும்பி பார்க்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாக்காக மாறுமா?
வாக்காக மாறுமா?எனவே, நலத்திட்டங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும் இலவசங்கள், திமுகவுக்கு வாக்காக மாறுமா? அல்லது மாற்றத்தை விரும்புவோர் எடுக்கும் முடிவை எதிராக திரும்புமா? என்பதை தேர்தல் முடிவு வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
===========