தண்ணீரில் மூழ்கி வீணான பயிர்கள்
TN Delta District Paddy Crops Damage Issue : டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.
விவசாயி பேட்டி
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், அம்மாப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.
கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அரசு கவனத்தில் கொள்ளவில்லை
பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது.
பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு இழப்பைச் சந்திப்போம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்டாவில் வேதனையுடன் விவசாயிகள்
இதைப்போல், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 1,62,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்திருந்தனர்.
தொடர் கன மழையில், நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளன.
குறிப்பாக டெல்டாவில் கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியிருப்பதால் இந்தாண்டு பெரும் பாதிப்புக்குள்ளானதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
============