TN Early Morning 6 AM Movie Show Permission Tamil Film Producers Thanks
அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி
தமிழ்நாட்டில் புதிய படங்கள் வெளியாகும் நாள்களில் இருந்து ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளைத் திரையிடவும் மற்றும் சனி, ஞாயிறு, உள்ளூர் பண்டிகை மற்றும் பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிடவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்த பின்னணி
2023 ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு திரையரங்கில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே திரைப்படங்கள் தொடங்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் காலை 6 மணிக்கே திரைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள், தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் மீதான தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்த் திரைப்படங்களுக்கு பிற மாநிலங்களுடன் இணையான வெளியீட்டு வாய்ப்பு இல்லாது போனது.
அரசின் நடவடிக்கை மற்றும் அமைப்புகளின் கோரிக்கை
இந்த முக்கிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில்....
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கங்கள்
தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம்
என, அனைத்து அமைப்புகளும் ஒருமித்த குரலில், தமிழ்நாட்டிலும் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
முன்னெடுக்கப்பட்ட முயற்சியும் மானியத் தொகையும்
இந்தக் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் பரிசீலித்த தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தயாரிப்பாளர்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார்.
மேலும், 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கி, அந்தத் தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாகவும் மனதளவிலும் மிகப்பெரிய ஆதரவை ஏற்கனவே தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது சிறப்புக் காட்சிகளுக்கான இந்த அனுமதியும் வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
==========