TN eSevai 2 Portal Digital Services Update
அரசுச் சேவைகளை எளிமையாக்க புதிய முயற்சி
தமிழகத்தில் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவையைக் குறைத்து, விரைவாக சான்றிதழ்களைப் பெறும் வகையில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வெளிப்படைத்தன்மை, லஞ்ச ஒழிப்பு மற்றும் சேவைகளை எளிதில் அணுகும் நிலையை நோக்கமாகக் கொண்டு பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என 200-க்கும் மேற்பட்ட சேவைகள் இ-சேவை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவைகளை மேலும் வேகமாகவும் எளிதாகவும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு "வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0" என்ற புதிய திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
டெண்டர் அறிவிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு
தற்போதுள்ள இ-சேவை தளத்தைப் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாக மேம்படுத்துவதற்காக தமிழக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியான தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0' சிறப்பம்சங்கள்
செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
1. சர்வர் முடக்கம் த தவிர்க்கப்படும்: தற்போது ஒரே நேரத்தில் ஏராளமானோர் லாகின் செய்யும்போது ஏற்படும் சர்வர் மெதுவாக்கம் மற்றும் முடக்கப் பிரச்சினைகள் புதிய 2.0 தளத்தில் இருக்காது.
2. ஒரே கிளிக்கில் 200+ சேவைகள்: பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சேவைகள் ஒரே கிளிக்கில் கிடைக்கும்.
3. மொபைல் பயன்பாடு: புதிய தளம் முழுக்க முழுக்க செல்போனில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. பொதுமக்கள் கம்ப்யூட்டர் சென்டர்களைத் தேடி அலையாமல் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.
4. அதிநவீன பாதுகாப்பு: பயனாளிகளின் ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் ஹேக் செய்யப்படாமல் இருக்க அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் சேர்க்கப்பட உள்ளது.
5. நேரடி அப்டேட்கள்: விண்ணப்பத்தின் நிலை மற்றும் சான்றிதழ் கிடைக்கும் விவரங்கள் நேரடியாக எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும்.
இ-சேவை மைய உரிமையாளர்களின் அச்சமும் உண்மை நிலவரமும்
செல்போனிலேயே அனைத்து சேவைகளும் கிடைக்கும் நிலை வந்தால் இ-சேவை மையங்களை நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
பாமர மக்களுக்குத் தேவை
ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள், தொழில்நுட்ப அறிவு குறைவானவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை தெரியாதவர்கள் தொடர்ந்து இ-சேவை மையங்களையே சார்ந்திருப்பார்கள்.
இருப்பினும், இ-சேவை மையங்களுக்கு நேரடியாக வரும் மக்களின் வருகை சற்றே குறைய வாய்ப்புள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே இதன் முழுமையான தாக்கம் தெரியவரும்.
===========