TN Government Employees Association Strike Announced Indefinite Protest confirmed from 6 January 2026  Google
தமிழ்நாடு

காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி- அரசு சங்க ஊழியர் சங்கம்!

அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Baala Murugan

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர் கோரிக்கை

TN Government Employees Association Strike : 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்குவது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, ஆசிரியர்கள், அனைத்துறை அரசு ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைவது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

6 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 விழுக்காடாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினரால் முன்வைக்கப்படுகின்றன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.

அமைச்சர்களிடம் பேசி எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை

இதையடுத்து அவர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த fota geo அமைப்பின் தலைவர் அமிர்தகுமார், பேச்சுவார்த்தையில் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்றார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பேசிய விஷயத்தையே பேசியது வருத்தமளித்ததாக கூறினர். ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.

கருப்பு பட்டை அணிந்து போராட்டம் உறுதி

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு, வரும் 27ஆம்தேதி நடைபெறும் என்றும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதில் பங்கேற்பார்கள் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.