TN govt allocated ₹603.34 crore to provide a special incentive of ₹709.50 per tonne to sugarcane bfarmers  source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

கரும்பு டன்னுக்கு ரூ.4,000, ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை : 90,000 விவசாயிகளுக்கு பயன் : ரூ.603 கோடி ஒதுக்கீடு..!

2025-26 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ரூ.603.34 கோடி ஒதுக்கியுள்ளது.

Kannan

சிறப்பு ஊக்கத்தொகை - நிதி விடுவிப்பு

தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ 603.34 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

முன் எப்போதும் இல்லா வகையில் சிறப்பு ஊக்கத்தொகை

கரும்பு விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையினைப் படிப்படியாக நிறைவேற்றிடும் வண்ணம் முதலமைச்சர் விஜய் முன் எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்கப்படும் என பேரவையில் அறிவித்தார்.

டன்னுக்கு 4,000 கிடைப்பது உறுதி

இதன் வாயிலாக கரும்பு விவசாயிகள், கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.4,000 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பு உயர்ந்து சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மேம்படுவதுடன், சர்க்கரை மற்றும் உப பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.603.34 கோடி நிதி விடுவிப்பு

இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆணையின்படி 2025-26-ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 2025-2026ம் ஆண்டு பருவத்தில் அரவைப்பணி மேற்கொண்டுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளில் 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள

நியாயமான ஆதாய விலையான ரூ.3,290.50 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.709.50 யையும் சேர்த்து, டன் ஒன்றிற்கு ரூ.4,000/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு மேல் உள்ள கரும்பிற்கு அதற்கேற்ப ரூ.4000க்கும் அதிகமாக கரும்பு விலை கிடைக்கப்பெறும்.

மேலும், இந்த அரசாணையின்படி, 01.10.2025 முதல் 30.09.2025 வரை சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

======