TN Temples Cell Phone Ban Relaxation Switch Off Rule
செல்போன் கட்டுப்பாடுகளில் தளர்வு
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பக்தர்கள் இனி தங்களின் செல்லிபோன்களைக் கோயில்களுக்குள் எடுத்துச் செல்லலாம். ஆனால், கோவிலுக்குள் நுழையும் போது செல்போன்களைக் கட்டாயம் 'சுவிட்ச் ஆப்' செய்து எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய தடையும் பக்தர்கள் சந்தித்த அசௌகரியங்களும்
வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கவும், பக்தர்கள் தெய்வங்களையும் சிலைகளையும் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பழநி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் உள்ளிட்ட 52 முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.
செல்போன் பாதுகாப்பு பெட்டகம்
இதனைத் தொடர்ந்து, கோவில்களின் வெளியே அமைக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்களில் போன்களை வைக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மேலும் சார்ஜர், ஹெட்போன்ஸ், கைக்கடிகாரம் போன்ற பொருட்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாலும், போன்களை ஒப்படைக்கவும் மீண்டும் பெற்றுக்கொள்ளவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாலும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதன் காரணமாக செல்போன் தடையைத் தளர்த்தக் கோரி பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
புகைப்படம் எடுக்கத் தடை நீடிக்கும்
இந்த நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், சில முக்கியக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
கோவில்களுக்குள் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் பூஜைகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கூடாது.
கோவிலுக்குள் செல்பி, ரீல்ஸ் எடுப்பது மற்றும் சமூக வலைதளப் பதிவுகளுக்காக வீடியோ எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.
==================