இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழ்நாட்டின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என மொத்தக் கடன் குறைந்தது ரூ.13.18 லட்சம் கோடியாகவும்,
மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 % வட்டிக்கு செலவிடப்படுவதாகவும் அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் எந்த வகையிலும் வியப்பளிக்கவில்லை.
நிதி நிலை குறித்து பாமக முன்வைத்த குற்றசாட்டுகள் முற்றிலும் உண்மையே
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் நிதி நிலை மோசமடைந்து வந்தது குறித்தும், கடன் தொகை அதிகரித்து வருவது குறித்தும் பாமக கடந்த ஐந்தாண்டுகளில் அறிக்கைகள், நிழல் நிதி நிலை அறிக்கைகள், உத்தேசப் பொருளாதார ஆய்வறிக்கைகள் ஆகியவற்றில் தெரிவித்து வந்த தரவுகள் தான் இப்போது அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தின் நிதி நிலைச் சீரழிவுகள் குறித்து கடந்த காலங்களில் பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசுகள் பொறுப்பேற்கும் போது நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதை மிகவும் ஆரோக்கியமானப் போக்காகவே பாமக கருதுகிறது. நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் ? என்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையை பாமக வரவேற்கிறது. ஆனால், இதை தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், கடன் சுமையை குறைப்பதற்குமான அடித்தளமாகத் தான் புதிய அரசு பயன்படுத்த வேண்டுமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது.
நிதி நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கான செயல் திட்டம், காலவரையறை உள்ளிட்டவற்றை தவெக அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு முக்கிய உண்மைகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை; மாறாக குறைந்திருக்கிறது என்பதும், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளின் மதிப்பு 61.70% ஆக அதிகரித்துள்ளது; மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இது 50 % க்கும் குறைவாகவே உள்ளது என்பதும் ஆகும்.
இந்த தரவுகள் உண்மை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த நிதி நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கான செயல் திட்டம், காலவரையறை உள்ளிட்டவற்றை தவெக அரசு அறிவிக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே பல கோடியாகும் என்ன செய்யபோகிறது தவெக?
2026- 27ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் படி அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.3 லட்சத்து 44,575 கோடி ஆகும். அதில் ஊதியம் ரூ.94,377.56 கோடி, ஓய்வூதியம் ரூ.45,323.17 கோடி, கடனுக்கான வட்டி ரூ.78,677.29 கோடி ஆகிய பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகள் மற்றும் ரூ.18,735.42 கோடி பிற செலவுகளை சேர்த்தாலே ரூ.2 லட்சத்து 37,113.44 கோடி வருகிறது.
இதில் ஒரு ரூபாயைக் கூட குறைக்க முடியாது. இதுதவிர இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவு ரூ. ஒரு லட்சத்து 56,108.41 கோடியை சேர்த்தால் அரசின் வருவாய் செலவுகள் மட்டுமே ரூ.3 லட்சத்து 93,221.85 கோடியாக அதிகரிக்கும். இதை சமாளிக்கவே ரூ.48,646.54 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். மூலதன செலவு ரூ.73,270 கோடியையும் சேர்த்தால் நிதிப் பற்றாக்குறை ரூ.ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 916 கோடியாக உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்
இந்த நிலைமையை தவெக அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது ? மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது ? என்பதற்கான செயல் திட்டத்தை தவெக அரசு அறிவிக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
==============