tvk government Midnight 'Special Drive Operation' in Chennai: Over 100 Rowdies Arrested in Swift Crackdown! source:google
தமிழ்நாடு

சென்னையில் நள்ளிரவில் அதிரடி ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ : 100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் அதிரடியாக கைது!

சென்னை முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரௌடிகளைக் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.

Kavitha prasanna

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், சமூக விரோதச் செயல்களை ஒடுக்கவும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது

இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 19) நள்ளிரவு சென்னையில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட 'ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' வேட்டையில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட ரௌடிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கின் எதிரொலி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (25) மற்றும் சீனிவாசன் (24) ஆகிய இரு பாடகர்கள், கடந்த மே 16-ஆம் தேதி மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

தனிப்படை அமைத்து தேடல்

இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையின் பலனாக, இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் (23), கலைச்செல்வன் (20), ஐயப்பன் (26), குமரவேல் (20), வேலன் (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்படப் பலரைக் காவல் துறையினர் நேற்று காலை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பகுதி வாரியாக நடந்த கைது நடவடிக்கை

இந்த இரட்டைக் கொலை வழக்கின் எதிரொலியாகவும், சென்னையில் நிலவும் ரௌடிசத்தை ஒடுக்கவும் சென்னை முழுவதும் நேற்று நள்ளிரவு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

நள்ளிரவில் அதிரடி வேட்டை

இச்சோதனையில் தியாகராய நகரில் 18 ரௌடிகளும், அடையாறில் 16 ரௌடிகளும், புளியந்தோப்பில் 20 ரௌடிகளும், அண்ணா நகரில் 9 ரௌடிகளும், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரௌடிகளும் உட்படச் சென்னை முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரௌடிகளைக் காவல் துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர்.

தமிழக அரசின் தீவிரக் கண்காணிப்பு

முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பிற்கு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தவெக அரசு தீவிர நடவடிக்கை

குறிப்பாகக் கோயில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.

காவல் துறை வட்டாரங்கள் தகவல்

இந்தச் சூழ்நிலையில், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளிகளைக் கண்டறியவும் இந்த நள்ளிரவுச் சோதனை நடத்தப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

=====