TVK govt led by Chief Minister Vijay has won the confidence vote securing 144 votes. google
தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு ”விஜய் அரசு வெற்றி” : ஆதரவு 144, எதிர்ப்பு 22, நடுநிலை 5 : திமுக வெளிநடப்பு!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

Rohini

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு

இந்தநிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் முதலில் தவெகவிற்கு ஆதரவு கொடுத்தது. அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்ல் கைகொடுக்க 120 பேரின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்.

விஜய் தலைமையில் அமைச்சரவை

ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதையடுத்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது.

திமுக வெளிநடப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது.

குதிரை வேக அரசு - முதல்வர் விஜய்

இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். தீர்மானத்தை ஆதரித்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தவெக அரசு குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு என்று அவர் பதிலளித்தார்.

கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு

இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5-ன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதலில் ஆதரவு, பின்னர் எதிர்ப்பு

இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

எடப்பாடி தரப்பு எதிர்ப்பு, வேலுமணி தரப்பு ஆதரவு

இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது. அதன்படி 22 பேர் எதிர்ப்பும், 25 பேர் ஆதரவும் தெரிவித்தனர்.

பாஜக, பாமக நடுநிலை

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக, பாஜக நடுநிலை வகித்தன. மதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வரவில்லை.

அரசுக்கு ஆதரவு 144 வாக்குகள்

இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.

22 பேர் எதிர்ப்பு

எதிராக 22 வாக்குகள் அதாவது எடப்பாடி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் வாக்களித்தனர்.

5 பேர் நடுநிலை

5 பேர் நடுநிலை வகித்தனர். பாமக எம்எல்ஏக்கள் 4 பேர், பாஜக எம்எல்ஏ ஒருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர்.

==========================